;
Athirady Tamil News

நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் !!!

0

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட, கண் முன்னாலே ஒப்படைக்கப்பட்ட அத்தனை பேரும் படுகொலை செய்யப்பட்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்பதனை இந்த அரசாங்கம் ஒப்புக்கொள்கின்றதா? அதனை அமைச்சர் வெளிப்படையாக கூற வேண்டும்” என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இதற்கான நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.

அவரது அலுவலகத்தில் ஊடகவியலாளர் வினவிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிரோடு இல்லை என்று அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட, கண் முன்னாலே ஒப்படைக்கப்பட்ட அத்தனை பேரும் படுகொலை செய்யப்பட்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்பதனை இந்த அரசாங்கம் ஒப்புக் கொள்கின்றதா? அதனை அமைச்சர் வெளிப்படையாக கூற வேண்டும்” என்று செல்வம் எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார்.

“தனக்கு பிரச்சினை வரக்கூடாது என்ற ரீதியிலே அவர்கள் உயிரோடு இல்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே, கண் முன்னால் ஒப்படைக்கப்பட்டவர்கள் எங்கே என்று போராடிக் கொண்டிருக்கின்ற தாய்மார்களுக்கு இது பதிலாக அமையாது.

இந்த விடயத்திலே நீதியமைச்சர் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக கூற வேண்டும். படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனை கூறுகின்ற போது தான் எங்களுடைய தரப்பிலே அதனை எப்படி நோக்கலாம் என்பதனை கூற முடியும். ஆகவே, உண்மைத் தன்மையை அமைச்சர் விஜயதாச வெளியே கொண்டு வர வேண்டும்” என்றார்.

“அவர்கள் உயிரோடு இல்லை என்ற சாக்குப் போக்கை கூறி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தாய்மாருடைய போராட்டத்தை மழுங்கடிக்க வேண்டாம். ஆகவே அவர்கள் உயிரோடு இல்லை என்றால் என்ன நடந்தது?, படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்களா? அல்லது அனைவரும் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்களா? என்பதை இந்த அரசாங்கம் வெளிப்படையாகக் கூற வேண்டும்.

மறைத்து கதை சொல்வது என்பது நிறுத்தபட வேண்டும். வருடக் கணக்கிலே தாய்மார்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கான நியாயம் கிடைக்கும் இதற்கான போராட்டம் தொடரும்” எனவும் எம்.பி குறிப்பிட்டார்.

“அவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், புதைக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தியை அமைச்சர் விஜயதாச கூற வேண்டும். அது தான் நேர்மையான அரசியல் வாதி. அரசாங்கம் மக்கள் சார்ந்த விடயத்தில் அக்கறையோடு இருக்கிறது என்பதனை இந்த விடயங்களில் இருந்து பார்க்க கூடியதாக இருக்கலாம்.

ஆனால் இந்த விடயத்திலே அவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதனை ஒத்துக்கொண்டு அதுவும் பாதுகாப்பு செயலாளாராக இருந்த கோட்டபாய ராஜபக்ஷவின் காலத்திலே கண் முன்னாலே ஒப்படைக்கப்பட்டவர்கள், பின்னர் அவர் ஜனாதிபதியாக வந்தும் அதற்கான பதில் கூறவில்லை” என்று சுட்டிக்காட்டினார்.

“தற்போது அமைச்சர் இந்த கருத்தை கூறுகின்ற சூழலிலே, கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் இருக்கின்ற அரசாங்கம் அல்லது இராணுவம் அவர்களை படுகொலை செய்தது என்பதனை இந்த அரசாங்கம் ஒத்துக்கொள்கின்ற ஒரு சந்தர்ப்பத்தை தர வேண்டும் என்பது தான் நேர்மையான விடயமாக இருக்கும்.

ஆகவே நீதியமைச்சர் வெளிப்படை தன்மையோடு பேச வேண்டும். சாக்குப் போக்கான பதில்களை கூறி தாய்மார்களுடைய போராட்டத்தை மழுங்கடிக்க வேண்டாம் என்பதனை கூறிக்கொள்கின்றேன்” என மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.