ராகுல் காந்தி பாதயாத்திரை இன்று மகாராஷ்டிராவில் நுழைகிறது..!!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை (பாரத் ஜோடா யாத்ரா) மேற்கொள்ள முடிவு செய்தார். அதன்படி ராகுல்காந்தியின் பாதயாத்திரை கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடாகா, ஆந்திரா மாநிலங்களில் பாதயாத்திரை மேற்கொண்ட பிறகு அவர் தெலுங்கானாவுக்கு சென்றார். தெலுங்கானா மாநிலத்தில் ராகுல் காந்தியின் பாத யாத்திரை கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இன்றுடன் அங்கு அவரது யாத்திரை நிறைவு பெறுகிறது. ராகுல் காந்தியின் பாத யாத்திரை தெலுங்கானாவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்துக்கு இன்று இரவு நுழைகிறது. அவரது 61-வது நாள் பாதயாத்திரை தெலுங்கானாவில் இன்று நடந்தது. ராகுல் காந்தியின் பாத யாத்திரை இன்று இரவு 7 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் மாவட்டம் தொகுதியில் நுழைகிறது. இரவில் அவரது பாத யாத்திரை வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. மகாராஷ்டிராவில் நாளை காலை 8.30 மணியில் இருந்து ராகுல் காந்தி பாதயாத்திரை தொடங்குகிறது. வருகிற 20-ந்தேதி வரை அவர் மகாராஷ்டிராவில் பாத யாத்திரை மேற்கொள்கிறார். 14 நாட்கள் யாத்திரையில் அவர் 15 சட்டசபை தொகுதி, 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு செல்கிறார். 5 மாவட்டங்களில் அவர் 382 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை செல்ல உள்ளார். மகாராஷ்டிரா பாத யாத்திரையின் போது ராகுல் காந்தி 2 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். முதல் பொதுக்கூட்டம் வருகிற 10-ந்தேதி நான்டெட் மாவட்டத்திலும், 2-வது பொதுக்கூட்டம் 18-ந்தேதி புல்தானா மாவட்டம் சென்காவ் பகுதியிலும் நடக்கிறது. ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் பங்கேற்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பல கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்து உள்ளது. மகாராஷ்டிராவில் முடிந்த பிறகு ராகுல் காந்தியின் பாத யாத்திரை மத்திய பிரதேச மாநிலத்துக்கு 20-ந்தேதி செல்கிறது.