மீண்டும் முட்டை தட்டுப்பாடு?
முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை 50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சந்தையில் முட்டை விலை உயர்ந்துள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
சிவப்பு முட்டை ஒன்று 55 ரூபாய்க்கும், வெள்ளை முட்டை 54 ஒன்று ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் சந்தையில் முட்டைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தினால் விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பல்பொருள் அங்காடிகளில் பத்து முட்டைகள் கொண்ட ஒரு பொதி 660 ரூபாய் தொடக்கம் 680 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
அண்மைய நாட்களாக முட்டை விலை கடுமையாக உயர்ந்து வந்த காரணத்தினால், அதை கட்டுப்படுத்த அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்தது.
எனினும், விலங்குணவு இறக்குமதி மற்றும் கோழி இறக்குமதி குறைந்துள்ள காரணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
எதிர்வரும் பண்டிகைக் காலம் மற்றும் அடுத்த வருடத்தில் முட்டைத் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விலை உயர்ந்து செல்கின்றமை மற்றும் தட்டுப்பாடு நிலவும் காரணத்தினால் சந்தையில் முட்டை விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.