பிரதமர் மோடி நாளை பெங்களூரு வருகை – வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைக்கிறார்..!!
கர்நாடக மாநிலத்தில் ஒரு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை பெங்களூரு வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று திட்டங்களை தொடங்கி வைக்கிறார். நாளை காலை 10 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலம் விதான சவுதாவுக்கு வருகிறார். பிறகு எம்.எல்.ஏ.க்கள் பவனுக்கு வந்து அங்குள்ள கனகதாசர், வால்மீகி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன்பிறகு கார் மூலம் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடி, அங்கு காலை 11 மணியளவில் சென்னை-மைசூரு வந்தேபாரத் அதிவிரைவு ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். மேலும், அதே இடத்தில் பாரத் கவுரவ் காசி தரிசன ரெயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார்.
அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு செல்கிறார். அங்கு ரூ.13 ஆயிரம் கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2-வது அதிநவீன முனையத்தை தொடங்கி வைக்கிறார். மேலும் அந்த விமான நிலைய வளாகத்தில் 108 உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கெம்பேகவுடாவின் வெண்கல சிலையை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்த அங்கு நடைபெறும் விழாவில் மோடி பேசுகிறார். கெம்பேகவுடாவுக்கு 108 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கல சிலை உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பெங்களூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.