போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் தயாரித்த இலங்கையை சேர்ந்தவர்கள் உள்பட 9 பேர் கைது..!!
போலி ஆவணங்கள் மூலமாக பாஸ்போர்ட் தயாரித்ததாக இலங்கையை சேர்ந்தவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பாஸ்போர்ட் தயாரிப்பு
பெங்களூருவில் போலி ஆவணங்கள் மூலமாக பாஸ்போர்ட் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுவதாக போலீசாருக்கு சில புகார்கள் வந்திருந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபடும் கும்பலை பிடிக்க தெற்கு மண்டலத்தில் உள்ள பசவனகுடி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. பசவனகுடி போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் போலி ஆவணங்கள் மூலமாக பாஸ்போர்ட் தயாரித்ததாக 4 பேரும், அந்த பாஸ்பார்ட்டை வைத்திருந்ததாக இலங்கையை சேர்ந்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் தற்போது கடும் பொருளாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், அந்த நாட்டை சேர்ந்த 5 பேர் பெங்களூருவுக்கு வந்திருந்தனர். இங்கிருந்து பிற வெளிநாட்டுக்கு செல்ல அவர்கள் முடிவு செய்திருந்தனர். இதற்கு தேவையான பாஸ்போர்ட்டை பெறுவதற்காக பசவனகுடியில் பாஸ்போர்ட் தயாரித்து கொடுக்கும் ஏஜென்ட்டுகளை சந்தித்து பேசி உள்ளனர். அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்களின் பெயரில் கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்டவற்றை போலியாக தயாரித்துள்ளனர்.
அந்த போலி ஆவணங்கள் மூலமாக இலங்கையை சேர்ந்த 5 பேருக்கும் பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்தது தெரியவந்துள்ளது. ஒரு பாஸ்போர்ட்டுக்கு ரூ.45 ஆயிரம் வாங்கி உள்ளனர். இதுவரை 50 நபர்களுக்கு போலி ஆவணங்கள் மூலமாக பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
போலி ஆவணங்கள் பறிமுதல்
கைதானவர்களில் ஒருவர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இடைத்தரகராக வேலை செய்து வருகிறார். தனது கூட்டாளிகள் 3 பேருடன் சேர்ந்து பாஸ்போர்ட் கேட்கும் நபர்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்துவிட்டு, பாஸ்போர்ட் அலுவலகத்தில் தனக்கு தெரிந்த அதிகாரிகள் மூலமாக பாஸ்போர்ட் வாங்கி கொடுத்து வந்துள்ளார். இலங்கையை சேர்ந்தவர்கள் தவிர கைதான 4 பேர் மீதும் பெங்களூருவில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 பேரில் ஒருவர் மீது 36 திருட்டு வழக்குகள் உள்ளன. மற்றொருவர் மீது 15 வழக்குகள் உள்ளன. கைதான 9 பேர் மீதும் பசவனகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து போலி ஆவணங்கள், பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதிப்பெண் சான்றிதழ்கள், ஆதார் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கூடுதல் போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் உடன் இருந்தார்.