கர்நாடகத்தில் அரசு பஸ்களின் சேவை எப்படி உள்ளது?- பொதுமக்கள் கருத்து..!!
கர்நாடகத்தில் அரசு பஸ்களின் சேவை எப்படி உள்ளது என்பது குறித்து பொதுமக்கள் கருத்து கூறியுள்ளனர்.
போக்குவரத்து சேவைகள்
கால்நடை, குதிரை, மாட்டு வண்டி, குதிரை வண்டி, பஸ் என்று போக்குவரத்து படிப்படியாக பரிணாம வளர்ச்சி கண்டு இன்று அதிவேகமாக அதாவது மணிக்கு அதிகபட்சமாக 800 கிலோ மீட்டர் வேகத்தில் (விமானம்) பயணிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். அதன் பிறகு வளா்ச்சி காரணமாக பல்வேறு வகையான போக்குவரத்து சேவைகள் வந்துவிட்டன. விமானம், ரெயில், மெட்ரோ ரெயில், கார், மோனோ ரெயில் என்று பல்வேறு போக்குவரத்து சேவைகள் அமலில் உள்ளன. ஆனாலும் அவற்றில் பஸ் போக்குவரத்து என்பது முதன்மையானதாக உள்ளது. விமானத்தில் பயணிக்க கட்டணம் அதிகம். செல்வந்தர்கள் மட்டுமே அதில் பயணிக்க முடியும் என்ற நிலை உள்ளது. ரெயில்களில் அனைத்து தரப்பினரும் பயணிக்கிறார்கள். ஆனால் அது முக்கிய நகரங்களை மட்டுமே இணைக்கின்றன. எல்லா பகுதிகளிலும் ரெயில் போக்குவரத்து வசதி கிடையாது. மெட்ரோ ரெயில் பெருநகரங்களில் மட்டுமே இயங்குகின்றன.
பொதுமக்களுக்கு சேவை
பஸ் போக்குவரத்து மட்டுமே நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் கிடைக்கிறது. இன்றைய நவீன உலகில் பஸ் வசதி இல்லாத கிராமங்கள் இருக்க முடியாது. மலைப்பகுதிகளில் உள்ள குக்கிராமங்களுக்கும் சாலை அமைத்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதனால் நமது வாழ்க்கையில் பஸ் போக்குவரத்து என்பது ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்துவிட்டது. அதனால் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மாநில அரசுகளே பஸ்களை இயக்கி பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகின்றன. கர்நாடகத்தில் கே.எஸ்.ஆர்.டி.சி.(கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழகம்), பி.எம்.டி.சி. (பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம்), என்.டபிள்யூ.கே.ஆர்.டி.சி. (வடமேற்கு கர்நாடக போக்குவரத்து கழகம்), என்.இ.கே.ஆர்.டி.சி. (வடகிழக்கு கர்நாடக போக்குவரத்து கழகம்) ஆகிய 4 போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த போக்குவரத்து கழகங்கள் மூலம் பொதுமக்களின் வசதிக்காக 24 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 1.10 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இது தவிர தனியார் பஸ்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இயங்குகின்றன.
நஷ்டத்தில் இயங்குகின்றன
இதில் கே.எஸ்.ஆர்.டி.சி. அமைப்பு முதன்மையானதாக திகழ்கிறது. இது பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்த கே.எஸ்.ஆர்.டி.சி. மட்டும் 8,200 பஸ்களை இயக்கி வருகிறது. பெங்களூருவில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது மட்டுமின்றி இந்த போக்குவரத்து கழகம் சார்பில் அதிக எண்ணிக்கையில் குளுகுளு வசதி கொண்ட சொகுசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கர்நாடகத்தில் தற்போது அரசு பஸ்களில் தினமும் 80 லட்சம் முதல் 1 கோடி பேர் வரை பயணிப்பதாக சொல்லப்படுகிறது. இதில் பெங்களூருவில் மட்டுமே சுமார் 50 லட்சம் பேர் பயணம் மேற்கொள்கிறார்கள். அனைத்து மாநில அரசுகளுமே, சேவை நோக்கத்தில் போக்குவரத்து சேவையை மக்களுக்கு வழங்கி வருகின்றன. அதனால் பெரும்பாலான மாநில அரசுகளின் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன.
பயணிகள் ஆர்வம்
சமீபத்தில் கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, போக்குவரத்து கழகங்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்தன. தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால் அரசு பஸ்களில் வழக்கமான கூட்டத்தை பார்க்க முடிகிறது. இதனால் அரசு போக்குவரத்து கழகங்கள் மீண்டு வருகின்றன. கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்கள் கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கோவா, மராட்டியம், புதுச்சேரி ஆகிய 7 மாநிலங்களுக்கும் செல்கின்றன.
தனியார் ஆம்னி பஸ்களுக்கு இணையான வசதிகளுடன் கே.எஸ்.ஆர்.டி.சி., சொகுசு வசதிகளுடன் கூடிய அதிநவீன பஸ்களை இயக்கி வருகிறது. அதனால் இந்த பஸ்களில் பயணிக்க பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். பயணிகளுக்கு மிக சிறப்பான சேவைகளை வழங்கி வருவதற்காக கே.எஸ்.ஆர்.டி.சி.க்கு 275 விருதுகள் கிடைத்துள்ளன. அரசு போக்குவரத்து கழகங்களில் இந்தியாவிலேயே கே.எஸ்.ஆர்.டி.சி. சிறப்பான போக்குவரத்து சேவையை வழங்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது. கர்நாடக அரசு பஸ்களின் சேவை குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
காயம் அடையும் சம்பவங்கள்
மண்டியா மாவட்டம் கல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவர் கூறுகையில், “கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்கள் நல்ல முறையில் இயங்குகின்றன. அதில் பயணிக்கும்போது நாங்கள் பாதுகாப்புடன் பயணிப்பதாக உணர்கிறோம். ஆனால் சாலைகளில் உள்ள பள்ளங்கள், வேகத்தடை போன்றவற்றை கவனிக்காமல் பஸ்சை அதிகவேகமாக இயக்குகிறார்கள். இதனால் பஸ்சின் பின்புறம் அமர்ந்திருக்கும் பயணிகள் தூக்கி அடிக்கப்பட்டு இருக்கையை விட்டு கீழே விழுந்து காயம் அடையும் சம்பவங்கள் நடக்கின்றன. இதை அந்த நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும். நடத்துனர்கள், டிரைவர்கள் அன்புடன் நடந்து கொள்கிறார்கள்” என்றார்.
கோரமங்களாவை சேர்ந்த பர்வீன்தாஜ் என்பவர் கூறும்போது, “கர்நாடகத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நகரங்களில் ஓடும் பஸ்கள் நன்றாக தான் இருக்கின்றன. ஆனால் கிராமப்புறங்களில் இயக்கப்படும் பஸ்களின் நிலை மோசமாக உள்ளது. அது அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை. கிராமப்புற மக்களுக்கும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய நல்ல தரமான பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சரியான நேரத்திற்கு பஸ்களை இயக்க வேண்டும்” என்றார்.
பயணிகள் நலச்சங்க தலைவர்
பெங்களூரு பஸ் பயணிகள் நலச்சங்க தலைவர் வினய் சீனிவாஸ் கூறியதாவது:- பெங்களூருவில் 6,500 பஸ்கள் ஓடுகின்றன. நகரில் 1.30 கோடி மக்கள் வசிக்கிறார்கள். இந்த மக்கள்தொகைக்கு 6,500 பஸ்கள் போதாது. கொரோனாவுக்கு பிறகு பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிட்டது. இதனால் பொதுமக்கள் உரிய நேரத்திற்கு பஸ் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். அவர்கள் சொந்த வாகனங்களை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துவிட்டது. அதனால் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பி.எம்.டி.சி. மற்றும் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு போல் நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும். அனைத்து பஸ்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். சமீபத்தில் கூட ஒரு பெண்ணுக்கு பஸ்சில் பாலியல் சீண்டல் நடந்துள்ளது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய பாலியல் சீண்டல் சம்பவங்களை தடுக்க ஒரு குழு அமைக்குமாறு நாங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். அரசும் ஒரு குழு அமைத்தது. ஆனால் அந்த குழு சரியாக செயல்படுவது இல்லை. கிராமப்புறங்களில் மக்களுக்கு போதிய அளவில் பஸ் வசதி இன்னும் செய்யப்படவில்லை. இதனால் அங்குள்ள மக்கள் மற்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு வரும் மாணவ-மாணவிகள் கஷ்டப்படுகிறார்கள். இந்த விஷயத்தில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு வினய் சீனிவாஸ் கூறினார்.