இந்து பற்றி சர்ச்சை பேச்சு; மன்னிப்பு கோரிய காங்கிரஸ் தலைவர் ஜார்கிகோளி..!!
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்து வருபவர் சதீஸ் ஜார்கிகோளி. இவர், பெலகாவி மாவட்டம் நிப்பானியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது, இந்து மதம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார். அவரது இந்த பேச்சுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பா.ஜ.க. தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக், இந்து மதம் குறித்து தவறாக பேசிய சதீஸ் ஜார்கிகோளி பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால், தீவிர போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார். இந்த நிலையில், கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு, தனது பேச்சை திரும்ப பெறுகிறேன் என கூறி ஜார்கிகோளி மன்னிப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அது மட்டுமின்றி தன்னை இந்துக்களுக்கு எதிரானவர் என அவதூறு ஏற்படுத்த முயன்றவர்களை கண்டறிந்து விசாரணை செய்ய கமிட்டி ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் கடிதத்தில் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ஜார்கிகோளி பெலகாவியில் பேசும்போது, இந்து என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? அது பெர்சியாவில் இருந்து வந்தது. அதற்கு இந்தியாவுடன் என்ன தொடர்பு? இந்து எப்படி உங்களுடைய ஒன்றாக முடியும்? என கேள்வி எழுப்பினார். இந்து என்பதற்கான அர்த்தம் பயங்கரம் நிறைந்தது. மக்கள் ஏன் அதனை தூக்கி உயரமுள்ள பீடத்தில் வைக்கின்றனர்? என்றும் கேள்வி எழுப்பினார். வாட்ஸ்அப் மற்றும் விக்கிபீடியாவை சென்று பாருங்கள். அது உங்களுடையது அல்ல என கூறினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்துக்களை புண்படுத்தியதுடன், தூண்டியும் விட்டுள்ளார் என பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போர்க்கொடி உயர்த்தினர். அவர் தனிப்பட்ட முறையில் கூறியுள்ளார். அதற்கும், தங்களுக்கும், சம்பந்தம் இல்லை என காங்கிரஸ் தலைவர்கள் கூறி விட்டனர். எனினும், தனது பேச்சில் இருந்து பின்வாங்க போவதில்லை என ஜார்கிகோளி கூறினார்.