வருகிற 16-ந்தேதி நடைதிறப்பு: சபரிமலையில் கமாண்டோ பாதுகாப்பு..!!
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று முதல் 41 நாட்கள் நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள்.
இம்முறை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. இதனால் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் . இதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் இம்முறை கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் கோவிலுக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளவும் உத்தரவிட்டனர். பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் பாதுகாப்புக்காக கமாண்டோ வீரர்களை பணியில் அமர்த்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதோடு டிரோன் காமிராக்கள் மூலம் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் முக்கிய பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கிடையே சபரிமலை வரும் பக்தர்களுக்கு நியாயமான விலையில் உணவு பொருட்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக இப்போதே ஒவ்வொரு உணவு பொருளின் விலையையும் அவர்கள் அறிவித்து உள்ளனர்.
அதன்படி முக்கிய உணவு பண்டங்களின் விலை விபரம் வருமாறு:-
டீ-ரூ.13,
காப்பி-ரூ.13,
பருப்பு வடை-ரூ.15,
உளுந்த வடை-ரூ.15,
போண்டா-ரூ.15,
தோசை- ரூ.13,
இட்லி-ரூ.13,
சப்பாத்தி-ரூ.14,
புரோட்டா-ரூ.15,
இடியாப்பம்-ரூ.14.
சாதம்-ரூ.75,
வெஜிடபிள் பிரியாணி-ரூ.75.