;
Athirady Tamil News

சைபர் குற்றங்கள் மாபெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றன- மத்திய பாதுகாப்பு மந்திரி..!!

0

தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய ராணுவ கல்லூரியின் 60வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங், பயிற்சி முடித்த இந்திய முப்படை அதிகாரிகள், ஆட்சிப்பணி அதிகாரிகள் மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு பட்டங்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மோடி தலைமையிலான மத்திய அரசு, உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அதிமுக்கியத்துவம் அளித்து வருகிறது. குறிப்பாக மக்களின் விருப்பங்கள் பாதுகாக்கப்படும்போதுதான், நாடு முழு வல்லமை பெற்றதாக மாறும் என்பதைக் கருத்தில் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பாதுப்புக்கு இடையிலான இடைவெளி குறுகி வரும் நிலையில், கால மாற்றத்திற்கு ஏற்ப நாடு எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களும் புதிய வடிவம் பெற்றிருக்கிறது. உள்நாட்டு தீவிரவாதம், தற்போது வெளிநாட்டில் பயிற்சி பெறுவது, நிதி திரட்டுவது, ஆயுதங்களை விநியோகிப்பது போன்றவற்றை மேற் கொள்கின்றன.

சைபர் குற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் மாபெரும் அச்சுறுத்தலாகத் திகழ்கின்றன. இவற்றால் எரிசக்தி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு உள்ளிட்டத் துறைகள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ரஷியா- உக்ரைன் இடையேயான போர் குறித்த தகவல்களை, சமூக வலைதளங்களும், இதர ஆன்லைன் தகவல் பரிமாற்ற தளங்களும், தங்கள் கண்ணோட்டத்தில் வெளியிட்டு வருவது புதிய தகவல் போராக மாறி விட்டது. சைபர் குற்றங்கள், சமூக வலைதளங்களின் தகவல் போர் போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிக்க சர்வதேச சமுதாயம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக நாடுகளை ஆதிக்கம் செலுத்தும் சில நாடுகளின் உத்தரவுகளை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. அனைத்து நாடுகளின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, சமமாக நடத்துவதுதான் இந்தியாவின் நீதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.