;
Athirady Tamil News

நாடாளுமன்றத்தில் மக்களின் குரலை வெளிப்படுத்த விடாமல் பா.ஜனதா தடுக்கிறது ராகுல்காந்தி குற்றச்சாட்டு..!!

0

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணம் செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி கேரளா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக கடந்த திங்கட்கிழமை இரவு மராட்டியம் வந்தடைந்தது. அவர் நேற்று 64-வது நாளாக தனது நடைபயணத்தை தொடர்ந்தார். நாந்தெட் மாவட்டம் லோதாவில் உள்ள கப்சி சவுக்கில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். அவர்களுடன் அங்கிருந்து காலை 6 மணி அளவில் தனது நடைபயணத்தை தொடங்கினார். செல்லும் வழியில் மக்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். குறிப்பாக 2 சிறுவர்களுடன் அவர் சாலையோரம் அமர்ந்து லேப்-டாப்பை பார்த்து கலந்துரையாடியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. பின்னர் மாலையில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல்காந்தி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்றத்தில் முக்கிய விவாதங்களின் போது எதிர்க்கட்சியினரால் பேச முடிவதில்லை. குறிப்பாக பணமதிப்பு நீக்கம், பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், அக்னிபத் திட்டம், கல்வான் பள்ளத்தாக்கு விவகாரம் போன்றவைகள் பற்றியெல்லாம் பேச முயன்றபோது எதிர்க்கட்சி எம்.பி.க்களின் மைக் துண்டிக்கப்பட்டது. முக்கியமான விவாதங்களின் போது மைக்குகளை துண்டிப்பது போன்ற வித்தைகளை பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்களை அடக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. மக்களின் குரலை வெளிப்படுத்த விடாமல் எங்களை தடுக்கிறார்கள். பிரதமரே, நீங்கள் கவனமாக கேளுங்கள். மக்களின் குரலை உங்களால் ஒடுக்க முடியாது. மக்கள் குரல் எதிரொலிக்கும்போது உங்கள் பிடிவாதம் சிதறுண்டு போகும். இவ்வாறு அவர் பேசினார். பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே, முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவான், தேசியவாத காங்கிரஸ் எம்.பி.யும், சரத்பவாரின் மகளுமான சுப்ரியா சுலே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.