;
Athirady Tamil News

மக்களிடம் நூதன திருட்டில் பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம்??

0

வவுனியா இலுப்பையடிப் பகுதியில் அமைந்துள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான “வன்னி கோப் சிட்டி” விற்பனை நிலையத்தில் உணவுப்பொருட் கொள்வனவிற்கு வழங்கப்படும் பற்றுச்சீட்டில் அத்தியாவசியமான உணவுப் பொருட்களின் விலைகள் தெளிவின்றிக் காணப்படுகின்றது. இச் செயற்பாடானது மக்களுக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதுடன் மக்களின் பணம் மறைமுகமாக சூறையாடப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

அரச சார்பு நிறுவனமாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினால் நிறுவப்பட்ட வன்னி கோப் சிட்டி விற்பனை நிலையத்தில் அத்தியாவசியமான உணவுப் பொருட்களை நியாயமான விலையில் கொள்வனவு செய்வதற்காக வசதியற்ற வறிய மக்கள் தேடிவருகின்றனர். இவ்வாறான நிலையில் கொள்வனவு செய்யப்படும் உணவுப் பொருட்களின் விபரம் விலைகள் என்பன பற்றுச்சீட்டில் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இதனால் அப் பொருட்களின் விலைகளை பொது மக்கள் அறிந்துகொள்ள முடியவில்லை.

பற்றுச்சீட்டு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ஊழியர் தெரிவிக்கின்றார். எனினும் இதனைச்சீர் செய்ய கடந்த சில தினங்களாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அல்லது மாற்றீடான பற்றுச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மக்களின் பணம் சூறையாடப்படுவதாகவும் மக்கள் சந்தேகிக்கின்றனர்.பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு எதிராக உணவுப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தில் பொது சுகாதாரப் பரிசோதகர்களினாலும் உணவுப் பொருட்கள் விற்பனைப் பற்றுச்சீட்டு தெளிவின்மை மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனைச் சட்டத்தில் குறித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த காலங்களிலும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பல்வேறு நிலையங்களில் பணியாற்றிய முகாமையாளர்கள் நிதி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமைக்கு எதிராக ஆக்கபூர்வமான விசாரணைகள் எவையும் இடம்பெற்று இருக்கவில்லை. என்றும் மக்கள் மேலும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.