சீரற்ற காலநிலையால் யாழில் 221 குடும்பங்கள் பாதிப்பு; ஒரு வீடு பகுதிகளவில் சேதம் – 14 குடும்பங்கள் நலன்புரி நிலையத்தில்!!!
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 221 குடும்பங்களைச் சேர்ந்த 733 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் டி.என்.சூரியராஜா தெரிவித்ததுடன், ஒரு வீடு பகுதிகளவில் சேதமடைந்துள்ளதாகவும், 14 குடும்பங்களை சேர்ந்த 46 பேர் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் 174 குடும்பங்களைச் சேர்ந்த 584 பேரும், யாழ்ப்பாணப் பிரதேச செயலகப் பிரிவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும், மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேரும், கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிகண்டி பொதுநோக்கு மண்டபத்தில் நலன்புரி நிலையம் அமைக்கப்பட்டு 14 குடும்பங்களை சேர்ந்த 46 பேர் தங்க வைக்கபட்டுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”