கேரளாவில் குமுளி வன பகுதியில் பயணிகளுடன் சென்ற அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானை..!!
கேரள மாநிலம் பத்தினம்திட்டா வன பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் கிராமத்திற்குள் புகுந்து பயிர் நிலங்களை சேதப்படுத்தி வந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு அரசு பத்தினம்திட்டாவில் இருந்து குமுளி நோக்கி சென்றது. இதுபோல குமுளியில் இருந்து இன்னொரு அரசு பஸ் பத்தினம்திட்டா வந்தது. கவி காட்டு பகுதியில் வந்த போது இரு அரசு பஸ்களுக்கு மத்தியில் ஒரு காட்டு யானை வந்தது. அந்த யானை 2 பஸ்களையும் வழிமறித்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பீதியில் தவித்தனர். யானை வழிமறித்த காட்டு பாதையில் ஒரு புறம் பள்ளத்தாக்கும், மறுபுறம் மேடான பகுதியுமாக இருந்தது. இதனால் யானை எந்த பக்கமும் செல்ல வழியின்றி இரண்டு பஸ்களையும் வழிமறித்தபடி நின்று கொண்டிருந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் தவிப்புக்கு ஆளானார்கள். நீண்ட நேரத்திற்கு பிறகு யானை அங்கிருந்து மெல்ல மேட்டு பாதையில் நடைபோட தொடங்கியது. அதன்பின்னரே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். காட்டு பாதையில் அரசு பஸ்சை யானை வழி மறித்ததை பஸ்சில் இருந்த பயணிகள் செல்போனில் படம் எடுத்து சமூக வலை தளத்தில் பதிவிட்டனர். பஸ்சை யானை வழி மறித்து நிற்பதும், பின்னர் அங்குமிங்கும் நடைபோடும் காட்சிகளும் அதில் பதிவாகி இருந்தது.இக்காட்சிகள் தற்போது சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது.