சப்-இன்ஸ்பெக்டர் மகனை துப்பாக்கியால் சுட்டு 1 கிலோ தங்கம், ரூ.75 லட்சம் கொள்ளை..!!
ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், கதிரி பாக்யா பள்ளியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் கதிரியில் உள்ள போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார். நாராயணசாமி நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றார். வீட்டில் அவரது மனைவி, மகன், மகள் மட்டும் இருந்தனர். நள்ளிரவு 5 பேர் கொண்ட கும்பல் நாராயணசாமி வீட்டு அருகே காரில் வந்து இறங்கினர். அவர்கள் 5 பேரும் துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு நாராயணசாமி வீட்டின் காலிங் பெல்லை அடித்தனர். வேலைக்குச் சென்ற கணவர் வீட்டிற்கு வந்ததாக எண்ணிய அவரது மனைவி கதவை திறந்தார்.
அப்போது அவரது முகத்தில் துப்பாக்கியை காட்டியபடி உள்ளே சென்ற கும்பல் வீட்டில் இருந்த 3 பேரின் கை கால்களை கட்டி விட்டு சத்தம் போட்டால் துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டினர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டரின் மனைவியிடம் பீரோ சாவியை பறித்து பீரோவை திறந்து அதில் இருந்த ஒரு கிலோ தங்க நகைகள், ரூ.75 லட்சம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு வெளியே செல்ல முயன்றனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டரின் மகன் கத்தி கூச்சலிட முயன்றார்.இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையன் ஒருவன் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் வாலிபரின் காலில் சுட்டார். இதில் வாலிபரின் காலில் குண்டு பாய்ந்து ரத்தம் வெளியேறியது. இந்த நிலையில் வேலைக்குச் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி வீடு திரும்பினார்.
வீட்டில் இருந்து மர்ம நபர்கள் வெளியே வருவதைக் கண்ட அவர் திருட்டு கும்பலை மடக்கி பிடிக்க முயன்றார். அப்போது கொள்ளையர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் நாராயணசாமியின் தலையில் பலமாக தாக்கி விட்டு காரில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து நாராயணசாமி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஆந்திரா மற்றும் கர்நாடகா முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சோதனை சாவடிகளில் போலீசார் பலப்படுத்தப்பட்டு வாகன சோதனை செய்தனர். இருப்பினும் கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்கவில்லை. கதிரி நகரம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் கொள்ளையர்கள் 5 பேரும் கடந்த ஒரு மாதமாக தங்கி இருந்து கொள்ளையடிக்க வீடுகளை நோட்டம் விட்டது தெரிய வந்தது.
கொள்ளையர்கள் லாட்ஜில் அறை எடுப்பதற்காக கொடுத்த ஆதார் கார்டுகளில் உத்தரபிரதேச மாநில முகவரி இருந்தது தெரியவந்தது. கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்தனர். தனிப்படை போலீசார் கொள்ளையர்கள் கொடுத்த முகவரிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் தீரன் சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.