யு.டி.எஸ் செயலி மூலம் ரெயில் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு இருந்த கட்டுப்பாடு தளர்வு..!!
யு.டி.எஸ் செல்லிடப்பேசி செயலி வாயிலாக முன்பதிவில்லா டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளுவதில் இதுவரை இருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு அளித்து இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, புறநகர்ப் பயணிகள், ரெயில் டிக்கெட் எடுக்கும் ரெயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவுக்குள் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, 20 கிலோ மீட்டருக்குள் இருக்கலாம் என்றும், புறநகர்ப் பகுதி அல்லாத ரெயில் நிலையங்களில், இதுவரை 2 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு 5 கிலோ மீட்டர் தொலைவு என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து மண்டலங்களுக்கும் இந்த வசதி நவம்பர் 7ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்திருப்பதாகவும், தொடர்ந்து பயணிகள் வைத்த கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. காகிதப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், பயணிகள் டிக்கெட் வாங்குமிடத்தில் வரிசையில் நிற்பதை தவிர்க்கும் நோக்கத்திலும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனால் இந்தச் செயலி உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.