பொருளாதார உபகுழுவின் முழுமையான அறிக்கை டிசம்பரில்!!
தேசிய பேரவையினால் அமைக்கப்பட்ட ‘பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து குறுகிய மற்றும் நடுத்தரகால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்காக உபகுழுவின் முதலாவது அறிக்கை அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் தேசிய பேரவையில் நேற்று (10) சமர்ப்பிக்கப்பட்டது.
அத்துடன், குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான உபகுழுவின் முன்னேற்றம் குறித்த சுருக்கமான அறிக்கை அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் பங்கேற்புடன் நேற்று (10) தேசிய பேரவை கூடியபோதே இந்த அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தரகால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரவணக்க இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், ஒன்பது துறைகள் தொடர்பில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தொழிற்சார் மட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள் உப குழு முன்னிலையில் அழைக்கப்பட்டு நடத்தப்பட்ட கலந்துரையாடல்களை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றார். அத்துடன், இந்த உபகுழுவின் முழுமையான அறிக்கையை டிசம்பர் மாதம் கையளிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான உபகுழுவின் அறிக்கையை முன்வைத்தமை குறித்துப் பாராட்டுக்களைத் தெரிவித்த சபாநாயகர், இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் அதனை அனைத்து உறுப்பினர்களுக்கும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன இங்கு கருத்துத் தெரிவிக்கையில், தேசிய பேரவையின் உபகுழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான முன்மொழிவுகளை ஆராய்ந்து கூடிய விரைவில் அவற்றை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், நிறுவனங்களுடன் இணைந்து செயற்படவேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவற்றை நடைமுறைப்படுத்த கட்சி பேதமின்றி அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகப் பிரதமர் மேலும் குறிப்பிட்டார். குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான உபகுழுவின் முன்னேற்றம் குறித்து இங்கு கருத்துத் தெரிவித்த அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிடுகையில், அரசாங்கங்கள் மாறினாலும் மாற்றமடையாது பேணக்கூடிய தேசிய கொள்கைகளை உருவாக்க தேசிய பேரவையினால் தலையிட முடியும் என்றார். இதனுடன் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து
ஒருங்கிணைக்கப்பட்ட அணுகுமுறையுடன் செயற்பட எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.