வந்தே பாரத் ரெயில்- பிரதமர் மோடி அளித்த விளக்கம்..!!
சென்னை – பெங்களூரு – மைசூரு வழித்தடத்தில் நாட்டின் 5-வது வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பெங்களூருவில் உள்ள கே.எஸ்.ஆர்.ரெயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாரத கவுரவ காசி தரிசன ரெயில் பயணத்தையும் பிரதமர் கொடியசைத்து துவக்கி வைத்தார். விழாவில் பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:
வந்தே பாரத் ஒரு ரெயில் மட்டுமல்ல, அது புதிய இந்தியாவின் புதிய அடையாளம். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பது தேக்கத்தின் நாட்களிலிருந்து இப்போது இந்தியா மீண்டதற்கான அடையாளமாகும். இந்திய ரெயில்வேயின் மொத்த மாற்றத்திற்கான இலக்குடன் நாங்கள் செயல்படுகிறோம். 400க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரெயில்கள் மற்றும் விஸ்டா டோம் பெட்டிகள் இந்திய ரெயில்வேயின் புதிய அடையாளமாக மாறி வருகின்றன. பிரத்யேக சரக்கு வழித்தடங்கள், சரக்கு போக்குவரத்தின் வேகத்தை அதிகரித்து நேரத்தை மிச்சப்படுத்தும். அதிவிரைவு அகலப்பாதை மாற்றம் ரெயில்வேயின் வரைபடத்தில் புதிய பகுதிகளை இணைத்து வருகிறது. நமது பாரம்பரியம் கலாச்சாரம் ஆன்மீகம் சார்ந்தது. பாரத் கவுரவ் ரெயில் மூலம் நம்பிக்கை மற்றும் ஆன்மீக தலங்கள் இணைக்கப்படுகின்றன. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை அவை வலுப்படுத்துகின்றன. இந்த ரெயிலின் 9 பயணங்கள் நிறைவடைந்துள்ளன.
ஷீரடி கோயில், ஸ்ரீ ராமாயண யாத்திரை, திவ்ய காசி யாத்திரை என எல்லாமே பயணிகளுக்கு மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது. இதேபோல் கர்நாடக மக்களுக்கு அயோத்தி, காசி மற்றும் பிரயாக்ராஜ் தரிசனத்தை வழங்கும் பாரத் கவுரவ காசி தரிசன ரெயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிலையில் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரெயில் நேற்று பெங்களூருவில் இருந்து சென்னை வந்தடைந்தது. சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்த, வந்தே பாரத் ரெயிலை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் வரவேற்றார். மேளம் தாளம் முழங்க மலர்கள் தூவி மாலை போட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.