முஸ்லிம் திருமண சட்டம் என்றால் என்னவென்றே பல முஸ்லிம் எம்பிமாருக்கு தெரியாது!!
முஸ்லிம் விவாக – விவாகரத்துச் சட்டம் தொடர்பில்இ முஸ்லிம் எம்.பிகளுடன் பேசுங்கள் என நீதியமைச்சரிடம் றிஷாட் எம்.பி கோரிக்கை விடுத்திருப்பது தவறானதாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
ஐக்கிய காங்கிரசினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
முஸ்லிம் திருமண சட்டம் என்றால் என்னவென்றே பல முஸ்லிம் எம்பிமாருக்கு தெரியாது என்பதே யதார்த்தமாகும்.
இந்த நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் நடைமுறையில் உள்ள திருமண சட்டத்தை வைத்தே திருமணம் செய்கின்றனர். ரிசாத் பதியுதீன் ஆகட்டும் ரவூப் ஹக்கீம் ஆகட்டும் இவர்களின் அப்பன் பாட்டன் அனைவரும் மேற்படி சட்டத்தின் பிரகாரமே திருமணம் செய்தவர்களாகும். இச்சட்டம் பிழையானது என்றும் திருத்த வேண்டும் என கூறுவதை ஏற்றால் இவர்களின் பெற்றோர் பிழையான, தப்பான சட்டத்தின் படி திருமணம் முடித்ததை இவர்கள் ஏற்றுக்கொள்ளும் கேவலம் ஏற்படுகிறது மட்டுமின்றி இஸ்லாமிய சட்டம் பிழையானது என்று மற்றவர்களுக்கும் காட்டுவதாக அமைகிறது.
முஸ்லிம் திருமண சட்டத்தால் 99.9 வீதமான முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாத நிலையில் ரவூப் ஹக்கீம் நீதி அமைச்சராக இருந்த போது, ஐரோப்பிய பணத்தினால் மூளைச்சலவை செய்யப்பட்ட சில பெண்களும் நம் நாட்டில் விபச்சாரத்துக்கு அனுமதி வேண்டும் என கூறிய முஸ்லிம் பெயர் தாங்கிகளும் ஆர்ப்பாட்டம் செய்ததால் மேற்படி சட்டத்தை திருத்த ரவூப் ஹக்கீம் முன் வந்தார். இதனை அப்போதே உலமா கட்சி கண்டித்தது மட்டுமின்றி இவ்வாறான முயற்சிகள் முஸ்லிம் திருமண சட்டத்தை முற்றாக ஒழிக்க கோரும் நிலையை உருவாக்கும் என எச்சரித்தோம். இறுதியில் இதற்கு முயற்சித்த ஹக்கீமின் நீதி அமைச்சை இறைவன் பறித்தான். சமூகத்தை விட பெண்கள்தான் ரவூப் ஹக்கீமுக்கு பிடிக்கும் என்பதையும் இது காட்டியது. அன்றே ஹக்கீம் இது விடயத்தில் எந்த மாற்றத்துக்கும் இடமளிக்க முடியாது என கூறியிருந்தால் இப்பிரச்சினை வளர்ந்திருக்காது.
இதன் பின் மேற்படி பெண்கள் ஞானசார போன்ற இனவாதிகளிடம் இதனை முன்னெடுக்கும்படி வேண்டினர். அதன் எதிரொலியே ஒரே நாடு ஒரே சட்டம் எனும் கிறுக்குத்தனமான கருத்தாகும்.
முஸ்லிம் சட்டத்தை திருத்த ரவூப் ஹக்கீம் குழுக்கள் அமைத்தது போன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் ஞானசார தலைமையில் செயலணி அமைத்தார். இறுதியில் இறைவனின் சாபம் ஏற்பட்டு பதவியை கைவிட்டு கோட்டா ஒழித்தோடும் நிலை ஏற்பட்டது. ஞானசாரவின் வாயும் அடங்கியது.
தற்போது மீண்டும் மேற்படி முஸ்லிம் லேபல் பெண்கள் முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்தும் படி நீதி அமைச்சரை கேட்டதால் மீண்டும் இப்பிரச்சினை தூக்கப்பட்டு சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதை ரிசாத் பதியுதீன் போன்ற சமூக அக்கறையுள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்தும் முயற்சிகளுக்கு முஸ்லிம் எம்பிமார் எவ்வகையிலும் துணை போக கூடாது என கோருகின்றோம்.
முஸ்லிம் திருமண சட்டத்தில் எத்தகைய திருத்தத்துக்கும் கை வைக்க வேண்டாம் என்பதே உலமா கட்சியின் நிலைப்பாடாகும். இந்த நிலைப்பாட்டை ரிசாத் பதியுதீன் போன்ற எம்பீக்கள் எடுத்து இந்நிலைப்பாட்டை பாராளுமன்றில் உரையாற்ற வேண்டுமே தவிர இது பற்றி முஸ்லிம் எம்பீக்கள் நீதி அமைச்சருடன் பேசக்கூடாது. அவ்வாறு பேசுவது திருத்தத்தை அனுமதிப்பதாக அமையும்
இன்றைய முஸ்லிம் எம்பீக்களால் சமூகம் எத்தகைய உரிமையையும் பெறவக்கில்லாத நிலையில் நமது மூதாதையர் பெற்றுத்தந்த உரிமையிலாவது கை வைக்க இடமளிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் என்றார்.