பேரணியாக சென்ற 2 பெண்கள் கைது !!
களுத்துறையில் இருந்து காலி முகத்திடலுக்கு ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்துச் செல்ல முயன்ற 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பிக்குகள் சம்மேளனத்தின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியே ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை 9.30 மணியளவில் களுத்துறையில் இருந்து, சிறிதம்ம தேரர் மற்றும் வசந்த முதலிகே ஆகியோரின் உருவங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு குறித்த இரு பெண்களும் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
களுத்துறை பாலத்தில், இரண்டு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் உட்பட கிட்டத்தட்ட இருநூறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவர்களை வழிமறித்ததை அடுத்து, காலி வீதியூடாக பஸ்ஸில் கொழும்பு நோக்கி சென்ற 2 பெண்கள் மற்றும் குழுவினர், களுத்துறை வடக்கு பகுதியில் இறங்கி மீண்டும் பேரணியாக செல்ல ஆரம்பித்துள்ளனர்.
அதன் பின்னர், வாதுவ பின்வத்த மற்றும் பாணந்துறை தெற்கு பொலிஸ் அதிகாரிகள் பல தடவைகள் அவர்களை திசை திருப்ப முயன்றதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்களைக் கைது செய்ததாகத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தனர்.