இந்தியாவில் 2022-ம் ஆண்டில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் அளவு குறைந்துள்ளது – ஆய்வறிக்கையில் தகவல்..!!
இந்தியாவில் நிலத்தடி நீர்வளத்தை பாதுகாக்கும் நோக்கில் நிலத்தடி நீர் நிலவரம், பயன்பாடு, பாதிப்பு மற்றும் மேம்பாடு குறித்து மத்திய நீர்வளத்துறையும் மாநில, ஒன்றிய பிரதேசங்களின் அரசுகளும் இணைந்து கூட்டாக கல ஆய்வை மேற்கொண்டு வருகின்றன. இதன்படி நடப்பு 2022-ம் ஆண்டின் ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில் கடந்த 2004-ம் ஆண்டிற்குப் பிறகு நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் அளவு இந்த ஆண்டில் தான் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2004-ம் ஆண்டில் நாடளவில் 23 ஆயிரத்து 100 கோடி கன மீட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டிருந்தது. அதே சமயம் 2022-ம் ஆண்டில் நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 43 ஆயிரத்து 760 கோடி கன மீட்டர் நிலத்தடி நீர் புதிதாக கிடைத்துள்ளதாகவும், 23 ஆயிரத்து 913 கோடி கன மீட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே 2020-ம் ஆண்டில் 43 ஆயிரத்து 600 கோடி கன மீட்டர் நிலத்தடி நீர் புதிதாக கிடைத்திருந்தது. அதே ஆண்டில் 24 ஆயிரத்து 500 கோடி கன மீட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டிருந்தது எனவும் நீர்வளத்துறையின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 1,006 இடங்களில் அதிக அளவில் நீர் உறிஞ்சி எடுக்கப்படுவதாகவும், 5 ஆண்டுகளுக்கு முந்தயை நிலையை விட தற்போது நிலைமை மேம்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.