விளைநிலத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்..!!
குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகாவில் உள்ள நெல்லுதுகேரி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அந்தப்பகுதியில் காட்டு யானை அட்டகாசம் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் இரவும், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 யானைகள் கிராமத்தையொட்டி உள்ள விளைநிலத்தில் புகுந்தன. அந்த யானைகள் நெல், காபி செடிகள், சோளம், வாழை மரங்களை சேதப்படுத்தியதுடன், தென்னை, பாக்கு மரங்களை பிடுங்கி எறிந்து அட்டகாசம் செய்தன. பின்னர் அந்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்று விட்டன.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது அந்தப்பகுதி மக்கள், காட்டு யானைகள் அட்டகாசம் நிரந்தரமாக உள்ளதாகவும், அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என்றும், பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அப்போது காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் வழங்கப்படும் எனவும் உறுதி அளித்தனர்.