360 கி.மீ. நடந்தே சென்று கன்றுக்குட்டியை காணிக்கையாக வழங்கிய பக்தர்..!!
தனியார் நிறுவன ஊழியர்
சிக்கமகளூரு மாவட்டம் கலசா அருகே ஹிரேபைல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரேயான்ஸ் ஜெயின். இவர் பெங்களூரு ஜிகினியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கொேரானா ஊரடங்கு நேரத்தில் வேலை இல்லாமல் தவித்த அவர், பசுமாடுகளை வளர்த்து பால் கறந்து விற்பனை செய்து வந்தார். அவர் கிர் இனத்தை சேர்ந்த பசு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த பசு ஈனும் முதல் கன்றுக்குட்டியை தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்குவதாக வேண்டி இருந்தார்.
360 கிலோ மீட்டர்…
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பசுமாடு கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றது. இதையடுத்து தனது வேண்டுதலை நிறைேவற்ற கடந்த 36 நாட்களுக்கு முன்பு ஸ்ரேயான்ஸ், பெங்களூருவில் இருந்து கன்றுக்குட்டியுடன் நடைபயணமாக தர்மஸ்தலா நோக்கி புறப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் தர்மஸ் தலா கோவிலை வந்தடைந்தார். அதாவது 36 நாட்கள் 360 கிலோ மீட்டர் தூரம் கன்றுக்குட்டியுடன் அவர் நடைபயணமாக வந்து தர்மஸ்தலா வந்துள்ளார். பின்னர் ஸ்ரேயான்ஸ், மஞ்சுநாதர் கோவில் தர்ம அதிகாரி வீரேந்திர ஹெக்டேவை சந்தித்து, கன்றுக்குட்டியை ஒப்படைத்தார்.
காணிக்கை
இதுகுறித்து ஸ்ரேயான்ஸ் கூறுகையில், நான் நடைபயணத்தை காலை மற்றும் மாலை வேளைகளில் மேற்கொண்டேன். கன்றுக்குட்டியை தினமும் பரிசோதனை செய்த பிறகு தான் நடக்க ஆரம்பிப்பேன். தற்போது எனது வேண்டுதல்படி கன்றுக்குட்டியை தர்மஸ்தலா கோவிலுக்கு காணிக்கையாக வழங்கி விட்டேன் என்றார்.