இந்தியா-பிரான்ஸ் விமானப் படைகளின் கூட்டு பயிற்சி நிறைவு,,!!
இந்திய விமானப்படை பல்வேறு நாடுகளின் விமானப்படையினருடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய விமானப் படை மற்றும் பிரெஞ்சு வான்வெளிப் படையின் 7-வது கூட்டு விமானப் பயிற்சி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் நடைபெற்று வந்தது. கருடா-VII என்ற பெயரில் நடைபெற்ற இந்த பயிற்சியில் பிரான்ஸ் விண்வெளிப் படையின் ரபேல் போர் விமானம் மற்றும் ஏ-330 பல்திறன் அம்சங்களுடன் கூடிய போர் விமானம் போன்றவைகள் பங்கேற்றன. இந்திய விமானப்படை சார்பாக சுகோய்-30, ரபேல், தேஜாஸ் மற்றும் ஜாகுவார் போர் விமானங்களும்,மி-17 ரக ஹெலிகாப்டர்களும் பங்கேற்றன.
இரு நாட்டு விமானப் படைகளுக்கும் இடையே தொழில் முறையிலான தொடர்பை ஏற்படுத்தவும், செயல்பாட்டுத் திறன் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பையும் இந்த பயிற்சி வழங்கியதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியின் போது இருநாட்டு விமானப்படை வீரர்களும் வான்வெளிப் போர் நடவடிக்கைகளின் நுட்பங்களை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் இந்த பயிற்சியானது இரு நாட்டு விமானப்படை வீரர்களுக்கு இடையேயான கலாச்சார பரிமாற்றத்திற்கான சூழலை வழங்கியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.