பாகிஸ்தான் எல்லையில் இருந்து ட்ரோன்கள் ஊடுருவல் இரு மடங்காக அதிகரிப்பு- எல்லைப் பாதுகாப்பு படை தகவல்..!!
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு எதிராக செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் எல்லைகள் வழியே ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வீசி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எல்லைப் பாதுகாப்பு படையின் இயக்குநர் ஜெனரல் பங்கஜ்குமார் சிங் கூறியுள்ளதாவது: ட்ரோன் தடயவியல் ஆய்வுக்காக டெல்லியில் அண்மையில் அதிநவீன ஆய்வகத்தை எல்லை பாதுகாப்பு படை நிறுவி உள்ளது. அதன் முடிவுகள் எங்களுக்க மிகவும் ஊக்கமளிக்கின்றன. இதன் மூலம் எல்லை தாண்டிய சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளின் முகவரியைக் கூட பாதுகாப்பு ஏஜென்சிகள் கண்காணிக்க முடியும். கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியே ஊடுருவிய சுமார் 79 ட்ரோன்களை பி.எஸ்.எஃப். கண்டறிந்தது. இது கடந்த ஆண்டு 109 ஆக அதிகரித்தது. நடப்பு ஆண்டில் அது 266 ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாப் எல்லைப் பகுதி வழியாக இந்த ஆண்டு 215 ட்ரோன்களும், ஜம்முவில் சுமார் 22 ட்ரோன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த பிரச்சினை தீவிரமானது. அவர்கள் (பயங்கரவாதிகள்) ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், போலி ரூபாய் நோட்டுக்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவிற்குள் கொண்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.