கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீன உள்கட்டமைப்பு பணி தடையின்றி நடக்கிறது- இந்திய ராணுவ தளபதி பேச்சு..!!
லடாக் எல்லை பகுதியில் கடந்த 30 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள இந்தியா-சீன படைகளின் நிலை குறித்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே கூறியுள்ளதாவது: கிழக்கு லடாக்கில் நிலைமை நிலையானது என்றாலும் கணிக்க முடியாத வகையில் உள்ளது. டெம்சோக் மற்றும் டெப்சாங் பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது குறித்த இரு நாடுகள் இடையேயான அடுத்த சுற்று ராணுவ பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தப்படுகிறது.
உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் சீன துருப்புக்களின் பலத்தில் எந்தக் குறைவும் இல்லை. எனினும் குளிர்காலம் தொடங்கியவுடன் சில படைப்பிரிவுகள் திரும்புவதற்கான அறிகுறிகள் இருக்கிறது. கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே சீனாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகள் தடையின்றி நடந்து வருகிறது. அவர்கள் (சீன ராணுவத்தினர்) ஹெலிபேடுகள், விமானநிலையங்கள் மற்றும் சாலைகளை அமைத்து வருகின்றனர்.
எங்களை பொருத்தவரை, எத்தகைய செயல்களையும் சமாளிக்கும் வகையில் போதுமான படைகள் மற்றும் போதுமான இருப்புக்கள் இருப்பதையும் நாங்கள் உறுதி செய்துள்ளோம். எங்களின் நலன்கள் மற்றும் உணர் திறன் இரண்டையும் பாதுகாக்கும் வகையில், சீன ராணுவம் மீதான நமது நடவடிக்கைகளை மிகவும் கவனமாக அளவீடு செய்யப்படுகின்றன. அனைத்து வகையான தற்செயல்களையும் சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.