இந்துமத எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை- ஒடிசா அரசுக்கு ஜெகநாதர் கோவில் பணியாளர்கள் கோரிக்கை..!!
சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகண நிகழ்வின் போது ஓடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் பிரியாணி விருந்துக்கு இந்து மத எதிர்ப்பாளர்கள் குழு ஏற்பாடு செய்துள்ளது. இந்த குழுவை தாக்கியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்து கடவுள்களுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்தவர்களுக்கு தண்டனை வழங்கக் கோரி, பூரி ஜெகநாதர் கோவில் பணியாளர்கள் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்குக்கு கடிதம் எழுதி உள்ளனர். சூரிய மற்றும் சந்திர கிரகணங்களின் போது நூற்றாண்டு பழமையான மரபுகளை கேலி செய்வதன் மூலம் பகுத்தறிவுவாதிகள் என்று கூறிக் கொள்பவர்கள் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளனர் என்று அந்தக் கடிதத்தில், 36 வெவ்வேறு குழுக்களை உள்ளடக்கிய சேவகர்கள் அமைப்பான சத்திஷா நிஜோக் குற்றம் சாட்டி உள்ளது.
இந்து மத எதிர்ப்பாளர்கள் குழு கடவுள் ராமர் மற்றும் லட்சுமணனுக்கு எதிராக தொலைக்காட்சி சேனல்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும், ஜெகநாதருக்கு கோழி உணவை பிரசாதமாக வழங்கலாம் என்று கூட அவர்கள் கூறி உள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய செயல்களில் ஈடுபடும் இந்துமத எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த பிரச்சினையால் ஒடிசா மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டால் அதற்கு மாநில அரசுதான் பொறுப்பு என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.