வவுனியாவில் ஆபத்தான வீதியில் பயணிக்கும் கற்பவதிகள் வீதியை செப்பனிடுமாறு கோரிக்கை!! (PHOTOS)
வவுனியா நொச்சிமோட்டை கிராம அலுவலர் பிரிவிற்கு சாந்தசோலை கிறேசர் வீதியில் அமைந்துள்ள தாய் சேய் நிலையத்திற்குச் செல்லும் பிரதான வீதி படுமோசமான நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. அந் நிலையத்திற்கு தற்போது செல்லும் கற்பவதிகள் பாதுகாப்பற்ற நிலையில் பயணிக்கின்றனர். இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்களும் இடம்பெற்று வருகின்றது எனவே குடும்ப நல நிலையத்திற்கு பாதுகாப்பாக சென்றுவருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சாந்தசோலை மகளிர் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 1994ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குறித்த வீதி கடந்த 28 வருடங்களாக புனரமைப்புச் செய்யப்படவில்லை. நொச்சிமோட்டை கிராம அலுவலர் பிரிவிலுள்ள துவரங்குளம், பேயாடிகூளாங்குளம், மாணிக்கர்வளவு, தம்பனைச்சோலை, சாந்தசோலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பல கற்பவதிகள் இந்த வீதியில் அமைந்துள்ள தாய்சேய் நிலையத்திற்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். சாந்தசோலை பிரதான வீதி கார்பெட் வீதியாக செப்பனிடப்பட்டுள்ளபோதிலும் குறித்த கிறேசர் வீதி செப்பனிடப்படவில்லை. இது குறித்து தமிழ் தெற்கு பிரதேசசபை அதிகாரிகளிடம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முறையிட்டும் வீதியானது சீர் செய்யப்படவில்லை. எனவே கற்பவதிகள் இவ்வீதியால் ஆபத்தான முறையில் பயணங்களை மேற்கொண்டு வருவது கற்பவதிகளை மேலும் ஆபத்தான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. எனவே இவ்வீதியை தற்காலிகமாக கிரவல் இட்டு செப்பனிட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கின்றோம். என்று சாந்தசோலை மாதர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளனர்.