சிறுமிக்கு பாலியல் தொல்லை: சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு..!!
கேரள மாநிலம் அம்பலவயல் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த 40 நாட்களுக்கு முன்பு அம்பலவயல் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு அவர், தன்னை 2 பேர் ஊட்டிக்கு கடத்தி சென்று லாட்ஜில் அடைத்து பலாத்காரம் செய்து விட்டதாக பரபரப்பு புகாரை தெரிவித்தார். சிறுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி அம்பலவயல் போலீசார் சிறுமியை தொடர்பு கொண்டு விசாரணை நடத்துவதற்கு ஊட்டிக்கு செல்ல வேண்டும் என கூறி அழைத்துள்ளனர். சிறுமியும் வந்தார். பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபின், சப்-இன்ஸ்பெக்டர் பாபு, பெண் போலீஸ் பிரஷி ஆகியோர் சிறுமியை அழைத்து கொண்டு போலீஸ் வாகனத்தில் ஊட்டிக்கு வந்தனர். ஊட்டியில் சிறுமி சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட லாட்ஜூக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் அம்பலவயல் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். செல்லும் வழியில் வாகனம் ஒரு இடத்தில் திடீரென நிறுத்தப்பட்டது. அப்போது ஜீப்பில் இருந்து இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் போலீசார் இறங்கி வெளியில் சென்று விட்டதாக தெரிகிறது. ஜீப்பில் சிறுமியும், சப்-இன்ஸ்பெக்டர் பாபுவும் மட்டும் தனியாக இருந்தனர். அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் பாபு, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் தொடக்கூடாத இடங்களில் தொட்டதுடன், அதனை தனது செல்போனில் புகைப்படமும் எடுத்து வைத்து கொண்டார். இதனை அவர்களுடன் வந்த இன்ஸ்பெக்டரோ, பெண் போலீசோ கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது. இதனால் மன வேதனை அடைந்த சிறுமி சம்பவம் குறித்து கண்ணூர் டி.ஐ.ஜி ராகுல் ஆர்.நாயரை நேரில் சந்தித்து புகார் அளித்தார். அந்த புகாரில், சப்-இன்ஸ்பெக்டர் பாபு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதனை இன்ஸ்பெக்டர் கண்டு கொள்ளவில்லை என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். விசாரணையில், சப்-இன்ஸ்பெக்டர் பாபு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து டி.ஐ.ஜி. ராகுல் ஆர்.நாயர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாபுவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த போது உடன் சென்ற பெண் போலீஸ் மற்றும் இன்ஸ்பெக்டர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி.பரிந்துரை செய்துள்ளார்.