பாலியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் மூன்று முக்கிய அமர்வுகளில் பங்கேற்கும் மோடி..!!
இந்தோனேசியாவின் பாலி நகரில் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. உக்ரைன் போர் மற்றும் அதனால் உலக அளவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் உள்ளிட்ட உலகளாவிய சவால்கள் குறித்து இந்த உச்சிமாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக மூன்று நாள் பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை டெல்லியிலிருந்து பாலி நகருக்கு புறப்பட்டுச் செல்கிறார். இந்த மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் சுகாதாரம் ஆகிய மூன்று முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்தார். மேலும் உலகப் பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், டிஜிட்டல் மாற்றம் குறித்து பிரதமர் மோடியும் மற்ற நாடுகளின் தலைவர்களும் விவாதிக்கவிருப்பதாகவும் குவாத்ரா கூறினார். இதுதவிர ஜி20 தலைவர்கள் சிலரையும் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச உள்ளார். இந்த உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர். தற்போது ஜி20 அமைப்பின் தலைமைப்பொறுப்பில் இந்தோனேசியா உள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் தலைமைப் பொறுப்பு இந்தியா வசம் வருகிறது.