;
Athirady Tamil News

23/24 நிதி உபாய பட்ஜெட் இன்று!!

0

நிதி அமைச்சர், பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் (பட்ஜெட்), பாராளுமன்றத்தில் இன்று (14) சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பாராளுமன்றம் இன்று (14) பிற்பகல் 1.30க்கு கூடியதன் பின்னர், பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும்.

இது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது வரவு- செலவுத் திட்டமாகும்.

இந்த ஆண்டின் இறுதி நான்கு மாதங்களுக்காக, ஜனாதிபதியால் இடைக்கால வரவு- செலவுத்திட்டம் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“நிதியமைச்சரினால் இன்று (14) சமர்ப்பிக்கப்படும் அடுத்தாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம், பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை நிவாரணம் வழங்கும் வகையிலான இலக்கை கொண்டிருக்கும்” என, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

“ முழுநாட்டு சனத்தொகையில் 75 சதவீதமான மக்கள் நிவாரணத்தை எதிர்பார்த்து இருக்கின்றனர். அந்த மக்கள் தொடர்பில் இந்த வரவு- செலவுத் திட்டத்தில் ஆகக் கூடுதலான அவதானம் செலுத்தப்பட்டுள்ளது” என்றார்.

“பொருளாதார ரீதியில் நாட்டை அடுத்த வருடம் கட்டியெழுப்பும் நோக்கில், ஏற்றுக்கொள்ளப்பட்ட நிதி உபாயத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த வரவு-செலவுத் திட்டம் 2024 ஆம் வருடத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழுந்து பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதாக அமைந்திருக்கும்” என்றார்.

இன்று (14) தாக்கல் செய்யப்படும் வரவு- செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு, நாளை (15) ஆரம்பமாகும். இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 22 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறும்.

வரவு-செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் நவம்பர் 23 ஆம் திகதியன்று ஆரம்பமாகும் இறுதி வாக்கெடுப்பு டிசெம்பர் 8ஆம் திகதியன்று இடம்பெறும்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் சமர்க்கப்படுவதால் பாராளுமன்றத்தின் பாதுகாப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்துக்கு இன்றையதினம் செல்வோர் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் அறைகளும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.