;
Athirady Tamil News

ஜனாதிபதி குறித்து திரிணாமுல் மந்திரி சர்ச்சை கருத்து – மன்னிப்பு கேட்டார் மம்தா..!!

0

மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் மந்திரியாக இருப்பவர் அகில் கிரி. பா.ஜ.க.வைச் சேர்ந்த சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் கூடியிருந்த பொதுமக்களின் முன்னால் அவர் பேசுகையில், சுவேந்து அதிகாரி எனது தோற்றம் நன்றாக இல்லை என கூறுகிறார். அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார். ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மக்களின் தோற்றத்தின் அடிப்படையில் அவர்களை எடை போடாது. உங்களது ஜனாதிபதி பதவியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றமளிக்கிறார்? என பேசியுள்ளார். அவரது பேச்சைக் கேட்ட சுற்றியிருந்த மக்கள் ஆரவாரம் எழுப்பினர்.

மந்திரியின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒடிசாவில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி பதவி விலகக் கோரியும் பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடந்தது. இதற்கிடையே, பா.ஜ.க. போராட்டத்தின் எதிரொலியாக ஜனாதிபதி பற்றி சர்ச்சையாக பேசியதற்கு திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி அகில் கிரி மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பற்றிய அகில் கிரியின் கருத்தை முதல் மந்திரி மம்தா பானர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பற்றிய அகில் கிரியின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அகில் செய்தது தவறு. அத்தகைய கருத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. அவர் எனது கட்சி சகா என்பதால் எனது கட்சி சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கட்சி ஏற்கனவே அகில் கிரியை எச்சரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.