32 ஆண்டுகளுக்கு பின் வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை..!!
கடந்த 1987-ம் ஆண்டு ஜூலை மாதம் சத்தியமங்கலத்தில் இருந்து அந்தியூர் செல்லும் வழியில் கொங்குருபாளையம் பகுதியில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் அருகில் வனச்சரகர் சிதம்பரநாதன் உள்பட 3 பேர் வீரப்பனால் கொலை செய்யப்பட்டனர். இது குறித்து ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் மேட்டூர் கருமலைக்கூடல் பகுதியில் வசித்து வந்த சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் மற்றும் ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 3 பேரும் கோவை மத்திய ஜெயிலில் தண்டனை அனுபவித்து வந்தனர். பல ஆண்டுகளாக கோவை ஜெயிலில் இருந்த மாதையன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மத்திய ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். மாதையனுக்கு வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து கடந்த மாதம் சிறை துறையினர் அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாதையன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆண்டியப்பன் மற்றும் பெருமாள் ஆகியோர் மட்டும் கோவை மத்திய ஜெயிலில் சிறை தண்டனை அனுபவித்து வந்தனர். 32 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் 2 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய 2 பேரும் நேற்று கோவை ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.