சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என்பது பொய்- எடப்பாடி பழனிசாமி தாக்கு..!!
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்தது. சென்னை புறநகர் பகுதிகளான மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேல் தளங்களில் குடியிருந்தவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். இந்நிலையில், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று நேரில் பார்வையிட்டார். பின்னர், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதையடுத்து சென்னை மதனந்தபுரத்தில் எதிர்க்கட்சி தலைவர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது:- சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என பொய் சொல்கின்றனர். சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து தரவில்லை. பல பகுதிகளில் மழைநீர் வடியாததால் தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் முறையாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அவசர கோலத்தில் திட்டமிடாமல் தமிழக அரசு பணிகளை மேற்கொண்டதால்தான் மழைநீர் தேங்குகிறது. சென்னையில் மிதமான மழையே பெய்துள்ளது. பெரிய அளவில் மழை பெய்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.