;
Athirady Tamil News

யாழில். போலி உறுதி முடிப்பு ; சட்டத்தரணிக்கு பிணை – ஏனையோர் தொடர்ந்தும் மறியலில்!

0

யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் விளக்கமறியரில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணியை நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் திருமதி நளினி சுபாஸ்கரன் கட்டளையிட்டார்.

யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதி – பொம்மைவெளி பகுதியில் உள்ள காணி ஒன்று அதன் இறந்து விட்ட உரிமையாளர்களான தம்பதியின் போலிக் கையொப்பங்கள் மூலம் நிறைவேற்றப்பட்ட உறுதியினால் மோசடியாக உரிமை மாற்றம் செய்யப்பட்டது. அது தொடர்பாக யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட, சட்டத்தரணி உள்ளிட்ட 9 சந்தேக நபர்களும் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்கள் சார்பான பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்து வரும் 21ஆம் திகதி கட்டளை வழங்கப்படும் என்று தவணையிட்ட மன்று அன்றுவரை சந்தேக நபர்கள் 9 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் சட்டத்தரணி சார்பில் திங்கட்கிழமை(14) நகர்த்தல் பத்திரத்தை முன்வைத்து ஆதரித்த சட்டத்தரணி, கலாநிதி குமாரவடிவேல் குருபரன் பிணை விண்ணப்பத்தை முன்வைத்து மேலதிக காரணங்களை மன்றில் சமர்ப்பித்தார்.

“சட்டத்தரணி பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கு உள்பட்டவர். அவரது சிகிச்சை தொடர்பான மருத்துவ சான்றிதழ்கள் மன்றின் கவனத்துக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

அவர் எந்த வகையிலும் இந்த வழக்கின் விசாரணைகளுக்கு இடையூறாகவோ தடையாகவோ ஒருபோதும் செயற்படமாட்டார். சட்டத்தரணி என்ற வகையில் அவர் இந்த மோசடி தொடர்பான உண்மையைக் கண்டறியந்து நீதியை நிலைநாட்ட ஒத்துழைப்பு வழங்குவார் என்பதை அவர் சார்பில் உறுதிபட மன்றிடம் முன்வைக்கின்றோம்.

அவர் பிணையில் உள்ள காலப்பகுதியில் நீதி பரிபாலனத்திலயோ பொலிஸ் விசாரணைகளிலோ தலையீடு செய்யமாட்டார் என்ற அடிப்படையிலேயே பொலிஸாரின் விண்ணப்பங்களும் அமைந்துள்ளதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இந்தகைய காரணங்களின் அடிப்படையில் அவரை பிணை விடுவிப்பதற்கான கட்டளையை ஆக்குமாறு கோருகின்றோம்” என சட்டத்தரணி, கலாநிதி கு.குருபரன் சமர்ப்பணம் செய்தார்.

சந்தேக நபர் சார்பான சமர்ப்பணத்தை ஆராய்ந்த மன்று சட்டத்தரணியை நிபந்தனையுடனான பிணையில் செல்ல அனுமதியளித்தது.

அதேவேளை ஏனைய 08 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.