நவாப் மாலிக் ஜாமீன் மனு மீது 24-ந் தேதி தீர்ப்பு வெளியாக வாய்ப்பு..!!
நிழல் உலக தாவூத் இப்ராகிம் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி மந்திரி பதவி வகித்த நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார். தேசியவாத காங்கிரசை சேர்ந்த அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது சிறை ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் ஜூலை மாதம் சிறப்பு கோர்ட்டில் நவாப் மாலிக் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இதில், தன் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்ததற்கு எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேநேரம் அவரது ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாகத்துறை, “முன்னாள் மந்திரி நவாப் மாலிக் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அசீனா பார்க்கர் ஆகியோருடன் தொடர்பில் இருந்துள்ளார். அவர் நிரபராதி என்ற கேள்விக்கே இடமில்லை” என தெரிவித்து இருந்தது. இந்த வழக்கு வருகிற 24-ந் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது. எனவே அன்று ஜாமீன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. இதற்கிடையில், முன்னாள் மந்திரி நவாப் மாலிக் தனது வக்கீல் மூலமாக பி.யி.டி- சி.டி. ஸ்கேன் எடுக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த ஸ்கேன் திசுக்கள் மற்றும் உடல் உறுப்புகளின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் உயிர்வேதியியல் செயல்பாட்டை கண்டறிய உதவும் சோதனை ஆகும். இதற்கு பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.