சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு: உடனடி தரிசன ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது..!!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளில் விரதத்தை தொடங்கி இருமுடி கட்டி வந்து ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். தொடர்ந்து உப தேவதைகளின் கோவில்களில் விளக்கு ஏற்றப்படும். பின்னர் 18-ம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படும். தொடர்ந்து புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் சன்னிதானத்தில் நடைபெறும்.
முன்னதாக சபரிமலை கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெயராமன் நம்பூதிரி, மாளிகப்புரம் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹரிகுமார் நம்பூதிரி ஆகியோர் இருமுடி கட்டி மேள தாளம் முழங்க 18-ம் படி வழியாக அழைத்து செல்லப்படுவார்கள். பின்னர் மாலை 6.30 மணிக்கு புதிய மேல்சாந்திகளுக்கு, தந்திரி கண்டரரு ராஜீவரு மூல மந்திரம் சொல்லி கொடுப்பதோடு அவர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடத்தப்படும். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. பக்தர்களின் தரிசனத்திற்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு கோவில் சாவி புதிய மேல்சாந்தியிடம் ஒப்படைக்கப்படும். மறுநாள் 17-ந் தேதி அதிகாலை முதல் புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்வார்.
அன்று முதல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், அத்தாள பூஜைக்கு பிறகு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். பக்தர்களின் வருகை அதிகமானால் தரிசனத்திற்கு வசதியாக கோவில் நடை திறக்கப்படும் நேரத்தில் மாறுதல் செய்யப்படும். விழாவின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை அடுத்த மாதம் 27-ந் தேதியும், ஜனவரி மாதம் 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறுகிறது.
சீசனை முன்னிட்டு இன்று முதல் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 6 கட்டங்களாக 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள். சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில் உடனடி தரிசன முன்பதிவிற்கு நிலக்கல் உள்பட 13 இடங்களில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த சேவை முழுமையாக ஐயப்ப பக்தர்களுக்கு இலவசமாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் அளிக்கப்படுகிறது. நடப்பு ஆண்டிற்கான உடனடி தரிசன ஆன்லைன் முன்பதிவை நேற்று திருவனந்தபுரம் ஸ்ரீகண்டேஸ்வரம் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் தொடங்கி வைத்தார்.