உலக மக்கள் தொகை 800 கோடியை கடந்தது- அடுத்த ஆண்டில் சீனாவை முந்தி இந்தியா முதல் இடத்தை பிடிக்கும்..!!
உலக மக்கள் தொகை நாள் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 11-ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக மக்கள் தொகை நாளன்று ஐ.நா. வெளியிட்ட மக்கள் தொகை புள்ளி விவரத்தில் நவம்பர் 15-ந் தேதி உலக மக்கள் தொகை 800 கோடியை தொடும் என்று கணித்திருந்தது. அதன்படி இன்று உலக மக்கள் தொகை 800 கோடியை கடந்து விட்டதாக ஐ.நா. புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. சபை கணிப்பின் படி அடுத்த ஆண்டு சீனாவை இந்தியா முந்தி மக்கள் தொகையில் முதல் இடத்தை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதல், பருவநிலை மாறுபாடு என இன்று உலகம் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்கள் தொகை அதிகரிப்பும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. 1950-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக கடந்த 2020-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை வளர்ச்சி சரிவடைந்து உள்ளது. காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா ஆகிய 8 நாடுகளில் மட்டும் 2050-ம் ஆண்டு அதிகரிக்கும் மக்கள் தொகையில் பாதி அளவு பங்களிப்பு இருக்கும். மேலும் உலக மக்கள் தொகை வருகிற 2030-ம் ஆண்டுக்குள் 850 கோடியை தாண்டும். 2050-ம் ஆண்டுக்குள் மக்கள் தொகை 970 கோடியை தாண்டி விடும். 2080-ம் ஆண்டு மக்கள் தொகை மிகவும் உச்சத்தை எட்டி 1000 கோடியை தாண்டி விடும். 2100-ம் ஆண்டு மக்கள் தொகை 1040 கோடியாக அதிகரிக்கும். மக்கள் தொகை 700 கோடியிலிருந்து 800 கோடியாக அதிகரிக்க 12 வருடம் ஆனது. சீனாவில் தற்போதைய மக்கள் தொகை 142.6 கோடியாகும். இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் மக்கள் தொகை 141.7 கோடியாகும். இதேபோல் அமெரிக்க மக்கள் தொகை 33.8 கோடியாகவும், இந்தோனேசிய மக்கள் தொகை 27.6 கோடியாகவும், பாகிஸ்தான் மக்கள் தொகை 23.6 கோடியாகவும் உள்ளது. இறப்பு விகிதம் குறைவதால் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2019-ம் ஆண்டில் மனிதனின் சராசரி ஆயுட் காலம் 72.8 ஆண்டுகளாக உள்ளது. இது 1990-ம் ஆண்டை காட்டிலும் சராசரி ஆயுட் காலம் 9 ஆண்டுகள் அதிகரித்துள்ளது. இனிவரும் காலங்களில் தொடர்ந்து இறப்பு விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது. அதாவது 2050-ம் ஆண்டு உலக அளவில் மனிதனின் சராசரி ஆயுட்காலம் 77.2 ஆண்டுகள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிக கருவுறுதல் நிலைகளை கொண்ட நாடுகள் தனிநபர் வருமானம் குறைந்த நாடுகளாக இருக்கும். எனவே உலகளாவிய மக்கள் தொகை வளர்ச்சியால் காலப்போக்கில் உலகின் ஏழ்மையான நாடுகளில் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலக மக்கள் தொகையானது சராசரியாக 1.10 சதவீதம் அதிகரிக்கிறது. இதில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக 2020-ம் ஆண்டு மட்டும் 1 சதவீதத்துக்கும் குறைவாக பதிவாகி இருந்தது. பெரும்பாலான சப்சகாரா ஆப்பிரிக்க நாடுகள், ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களே சமீபத்திய கருவுறுதல் சரிவுக்கு காரணமாக உள்ளது. உழைக்கும் வயது மக்கள் தொகையின் இந்த வளர்ச்சியால் தனிநபர் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பதற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது. ஐ.நா. மக்கள் தொகை நிதியத்தின் தலைவர் நடாலியா கூறுகையில், “800 கோடி மக்கள் தொகை என்பது மனித குலத்துக்கு ஒரு முக்கியமான மைல் கல் ஆகும். மக்கள் தொகை அதிகரிப்பை பொறுத்தவரை இது ஆயுட்காலம் அதிகரிப்பதையும், தாய் மற்றும் குழந்தை இறப்புகள் குறைவாக இருப்பதையும் குறிக்கிறது. ஆனால் இந்த மக்கள் தொகை அதிகரிப்பினால் கொண்டாட்டங்களை விட அதிக கவலைகளை ஏற்படுத்துகிறது” என்று கூறியுள்ளார். மக்கள் தொகை நிபுணர் கனெம் கூறுகையில், ‘உலகின் அதிக மக்கள் தொகையை பற்றி கவலைப்பட வேண்டாம். ஆனால் பணக்காரர்களின் அதிக அளவு நிலத்தின் வளங்கள் நுகர்வு குறித்தே கவலைப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.