உயிர் காக்கும் மருந்துவக் கருவிகள் தயாரிப்பில் இந்தியா முன்னிலை-மத்திய மந்திரி தகவல்..!!
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த மருத்துவ கருவிகள் பிரிவை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். பின்னர் அங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே அவர் கலந்துரையாடினார். செயற்கையான இதயவால்வு, ஆக்சிஜன் செலுத்தும் கருவி போன்ற மருத்துவ உபகரணங்களை இந்த கல்வி நிறுவனம் உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். உயிர் காக்கும் மருந்துவக் கருவிகள் தயாரிப்பில் உலகின் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது என்றும், அவற்றை தயாரிப்பதற்கான செலவு மற்ற நாடுகளை விட மூன்றில் ஒரு பங்காக உள்ளது என்றும் அவர் கூறினார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உலகத் தரத்திலான மருத்துவ உபகரணங்கள் நமது நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும், இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களைவிட இது முதல் மூன்றில் ஒரு பங்கு வரை குறைந்த செலவில் கிடைக்கின்றன என்றும் மந்திரி குறிப்பிட்டார். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, யோகா, இயற்கை வைத்தியம் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கான தொழில்நுட்பங்களை இந்தியா ஆராய்ச்சி செய்ததை மேற்கத்திய நாடுகள் வியப்புடன் பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.