இந்திய விமானப்படையில், போக்குவரத்துப் பயன்பாட்டிற்கு மின்சார வாகனங்கள் அறிமுகம்..!!
சுற்றுச் சூழல் மேம்பாட்டு நடவடிக்கையாகவும், கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்காகவும், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்திய விமானப்படை, தமது போக்குவரத்துப் பயன்பாடுகளுக்கு டாடா நெக்ஸான் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள விமானப்படைத் தலைமை அலுவலகமான வாயு பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் 12 மின்சார வாகனங்களின் பயன்பாட்டை விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.சௌத்ரி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது. பல்வேறு விமானப்படை தளங்களில் சார்ஜிங் வசதி உள்பட உள்கட்டமைப்பை நிறுவுதல் உள்ளிட்ட மின்-வாகனங்களுக்கான பயன்பாட்டிற்கான சூழல் அமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மின்சார பேருந்துகள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் கார்களை வாங்குவது தொடர்பாக, இந்திய விமானப்படை ஏற்கனவே இந்திய ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற போக்குவரத்து இயக்கத்தை நோக்கிய பயணத்தில், இந்திய விமானப் படையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.