மாணவர்கள் ரியூசன் செல்லாது கட்டாயம் விளையாட்டில் ஈடுபட வேண்டும் யாழ்.போதனா பணிப்பாளர் தெரிவிப்பு!! (PHOTOS)
மாணவர்கள் மாலை நேரம் 5.30 இன் பின் கட்டாயம் விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டும். ரியூசன் செல்ல வேண்டாம் வேறு செயற்பாட்டில் ஈடுபடாமல் மைதானங்களுக்குச் செல்லுங்கள் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஏற்பாட்டில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு”அதிகரித்த நிறையையும் பிழையான வாழ்க்கை முறையையும் மாற்றி நீரிழிவை வெற்றி கொள்வோம் ” எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வுப்பேரணி(14.11.2022) காலை 7.30 மணிக்கு யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து ஆரம்பித்து யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் வரை நடைபெற்றது. இவ் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ். போதனா வைத்தியசாலை தொடக்கம் மாவட்ட செயலகம் வரை 3 ,4கிலோ மீற்றர் நடைபவனியில் பங்குபற்றியமை பயனாக இருக்கும் என நம்புகின்றேன். மாணவர்கள் ஒவ்வொரு நாளும் மாலை 5.30 மணியின் பின் கட்டாயம் விளையாட்டில் ஈடுபட வேண்டும்.ரியூசன் செல்ல வேண்டாம். வேறு எந்த செயற்பாட்டிலும் ஈடுபடாமல் குதூகலமாக மைதானத்தில் ஈடுபட்டு உங்களை சுகதேகியாக வைத்துக் கொள்ளுங்கள்.
இன்றைய நாளின் முக்கியத்துவத்தை அறிந்து பல வைத்தியர்கள் தங்கள் கடமைகளை பின் தள்ளி வைத்து விட்டு தாமும் பங்கு பற்றி நடைப்பயிற்சி உணவுப் பழக்க வழக்கம் தொடர்பில் தெளிவான கருத்துக்களை கூறியுள்ளனர். அத்துடன் நடைபவனி நிகழ்வு ஆரம்பிக்க முன் அரங்கச் செயற்பாட்டின் மூலம் உற்சாகப்படுத்தி உடல் அசைவு உள அசைவுகளை ஏற்படுத்தியுள்ளனர் அரங்கச் செயற்பாட்டுக் குழுவினர். ஆரோக்கியமாக ஒருவன் வாழ்வதற்கு அவருடைய எண்ணங்களும் அன்றாட கடமைகளும் அன்றாட நடவடிக்கைகளும் காரணமாக அமைகின்றன. என்பதனை நாம் இங்கு பல்வேறு செயற்பாட்டினூடாக அறிந்து கொள்ள முடிகின்றது என்றார்.
இவ்விழிப்புணர்வு நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் , மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ,பொது வைத்திய நிபுணர்களான வைத்தியர். பேரானந்தராஜா , வைத்தியர்.சிவன்சுதன், வைத்தியர்.ஜே.நளாயினி, குழந்தை நல வைத்திய நிபுணர் வைத்தியர். ஸ்ரீசரவணபவானந்தன், அகஞ்சுரங்கும் தொகுதியியல் நிபுணர் வைத்தியர் அரவிந்தன், நீரிழிவு சிகிச்சை நிலைய வைத்தியர். பரமேஸ்வரன். கலாநிதி க. சிதம்பரநாதன் ,போதனா வைத்தியசாலை நீரிழிவு கழகத்தின் உறுப்பினர்கள், வைத்தியர்கள், தாதியர்கள்,பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கிராம சேவகர்கள், மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.