முல்லைப் பெரியாறு அணை விவகாரம்- தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல்..!!
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசு தமிழகத்துக்கு போதிய ஒத்துழைப்பு வழங்குவது இல்லை. இது தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளுக்கான பொருட்களை எடுத்துச் செல்ல வல்லக்கடவு-முல்லைப் பெரியார் காட்டுச் சாலையை பயன்படுத்த அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடையீட்டு மனுவில், முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு, அணையை பலப்படுத்துவதற்கான நிலுவைப் பணிகளை நிறைவு செய்ய மேற்பார்வைக்குழுவுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளுக்கான பொருட்களை எடுத்துச்செல்ல வல்லக்கடவு-முல்லைப் பெரியாறு காட்டுச்சாலையை அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும். பேபி அணையை பலப்படுத்த 15 மரங்களை வெட்ட கேரளத்தின் அனுமதியை மீண்டும் அளிக்க உத்தரவிட வேண்டும். முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர்வரத்து, வெள்ள முன்னெச்சரிக்கை தொடர்பாக கருவிகளை பொருத்தி, அவற்றை இணையத்தில் வெளியிட கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும். பெரியாறு ஏரியில் புதிய படகுகளை இயக்க தமிழக அரசுக்கு அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.