இதுவே கடைசி முறை: நீதிபதி அறிவிப்பு!!
கொழும்பு, தெமட்டக்கொடை பகுதியில் இளைஞரொருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி இடம்பெறும் என்றும் சாட்சிய விசாரணை ஒத்திவைக்கப்படுவது இதுவே கடைசி முறை என்றும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா, இன்று (16) அறிவித்தார்.
அதிகுற்றப்பத்திரத்தில் பட்டியலிடப்பட்டுள்ள வீடியோ ஆதாரங்களின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்ய கால அவகாசம் தேவை என்றும் வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறும் பிரதிவாதி ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் ஆஜரான சட்டத்தரணி அஷான் பெர்னாண்டோ மன்றில் கோரி நின்றார்.
இந்த வழக்கின் சாட்சிய விசாரணை 6 வருடங்களாக பிற்போடப்பட்டு வருவதாக முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, மன்றின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
இதனையடுத்தே, சாட்சிய விசாரணைக்காக தினமாக ஜனவரி மாதம் 30ஆம் திகதியை குறித்த நீதிபதி, கடைசி முறையாக சாட்சிய விசாரணை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.
2015ஆம் ஆண்டு டிசெம்பர் 21ஆம் திகதியன்று, ஹிருணிகா எம்.பிக்குச் சொந்தமான டிபெண்டர் ரக வாகனத்தில் வந்து தெமட்டகொட பகுதியில் வைத்து இளைஞனொருவரைக் கடத்திய சம்பவம் தொடர்பில் ஹிருணிக்கா மற்றும் மெய்ப்பாதுகாவலர்கள் உட்பட 9 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்குடன் தொடர்புடைய எண்மர் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன், ஹிருணிகா எம்.பி தன்மீதான குற்றச்சாட்டை மறுத்திருந்தார். எண்மரில் ஒருவர் 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர் (8ஆவது குற்றவாளி) என்பதால் அவர் விடுவிக்கப்பட்டார்.
ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் பாடசாலை மாணவர் ஒருவரைத் தவிர, குற்றத்தை ஒப்புக்கொண்ட மற்ற ஏழு குற்றவாளிகளுக்கும் 12 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதேவேளை, தமது சிரேஷ்ட வழக்குரைஞர் அஷான் பெர்னாண்டோ சுகயீனமடைந்துள்ளதால் மேலதிக சாட்சிய விசாரணைக்காக பிறிதொரு தினத்தை அறிவிக்குமாறு ஹிருணிக்கா சார்பில் ஆஜரான சட்டத்தரணி, ஓகஸ்ட் 24ஆம் திகதி மன்றில் அறிவித்தமைக்கு அமைய, நேற்று வரை சாட்சிய விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், குறித்த வழக்கின் சாட்சிய விசாரணை கிட்டத்தட்ட 13ஆவது தடவையாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த அமர்வின் போது, திறந்த நீதிமன்றத்தில் நீதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.