பள்ளத்தாக்கில் கால்டாக்சி விழுந்த விபத்தில் 4 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு..!!
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டம் மார்வாவிலிருந்து ரெனி பகுதிக்கு நேற்று மாலை பயணிகளை ஏற்றிச் சென்ற கால்டாக்சி ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. மீட்பு பணியில் காவல்துறை, ராணுவ வீரர்கள், மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 4 பெண்கள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக மாவட்ட காவல் துணை ஆணையர் தேவன்யாதவ் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு நௌபாச்சி சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இதேபோல் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்கும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, அவர்களது குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். விபத்தில் நிகழ்ந்த உயிர் இழப்புகள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜனநாயக ஆசாத் கட்சியின் தலைவர் குலாம் நபி ஆசாத், இதுபோன்ற விபத்துகளை தடுக்க அதிகாரிகள் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.