இந்திய பாரம்பரியத்தை மீறுகிறார் பிரதமர் மோடி- காங்கிரஸ் குற்றச்சாட்டு..!!
இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பாலி நகரத்தில் நடைபெற்ற இந்திய சமூகத்தினர் இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் வளர்ச்சியை 2014 ஆண்டுக்கு முந்தையது மற்றும் பிந்தையது என குறிப்பிட்டு பேசினார். 2014ம் ஆண்டு தாம் பிரதமராக பதவியேற்றதற்கு பின்னரே இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உள்நாட்டு அரசியலை வெளிநாட்டில் பிரதமர் பேசியதாக கூறி காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இதற்கு முன்னர் நமது பிரதமர்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் உள்நாட்டு அரசியல், பாரபட்சம், மற்றும் தவறான எண்ணங்களை பேசியதில்லை என்பது நீண்ட கால நமது பாரம்பரியம் ஆகும். இந்த ஆரோக்கியமான பாரம்பரியம், 2014 மே மாதத்துக்கு பிறகு (மோடி ஆட்சிக்கு பிறகு) உடைக்கப்பட்டு விட்டது. இதற்கு சமீபத்திய உதாரணமாக இந்தோனேசியாவில் மீண்டும் அவர் (பிரதமர் மோடி) தனது சுய ஆவேசத்தைக் காட்டி உள்ளார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.