கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலையில் அலைமோதிய ஐயப்ப பக்தர்கள் கூட்டம்..!!
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை விழா தொடங்கியது. இதற்காக நேற்று மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பின்பு சுத்தி பூஜைகளுக்கு பிறகு இந்த ஆண்டுக்கான புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி பதவி ஏற்று கொண்டார். அதன்பின்பு பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் அனுமதிக்கப்பட்டார்கள். இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து வழிபாடுகளை மேற்கொண்டார். தொடர்ந்து இருமுடி கட்டி வந்த பக்தர்கள் 18-ம் படி ஏற அனுமதிக்கப்பட்டனர். முதல் நாளான இன்றே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான கன்னிசாமிகளும் முதல் நாளில் தரிசனத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் சரண கோஷம் முழங்க 18-ம் படி ஏறி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நெய் அபிஷேகம் செய்யவும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக கோவிலில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் சுமார் 1250 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.