அரசாங்கதுக்கும் ஆளுநருக்கும் புனர்வாழ்வு தேவை !!
நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு தற்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் அடிமையாகியுள்ளார். அதேபோல் கடனைப் பெறுவதிலும் எங்களது அரசாங்கம் அடிமையாகியுள்ளது. எனவே அரசாங்கத்தையும், ஆளுநரையும் புனர்வாழ்வளிக்க கந்தக்காட்டுக்கு அனுப்ப வேண்டும் என சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
வரவு – செலவு திட்டம் மீதான இன்றைய (17) பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதிகளவான நாணயத்தாள்களை அச்சிட்டதால் ஏற்பட்ட பணவீக்கம் நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தியதாக மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்திருந்தார். அப்படிக்கூறிய அவரே, வரலாற்றில் அதிகளவான நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளார்.
பாதிப்புகளை அறிந்து வைத்திருந்தாலும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களால் அதனைக் கைவிட முடியாது. அதுபோலதான் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவும் நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு அடிமையாகியுள்ளார். அதுபோல அரசாங்கமும் கடனைப் பெறுவதற்கு அடிமையாகியிருக்கிறது. எனவே, மத்திய வங்கியின் ஆளுநரையும், எங்களது அரசாங்கத்தையும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி புனர்வாழ்வளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.