வரும் தேர்தலில் தெலுங்கு தேசம் வென்றால் மட்டுமே சட்டசபைக்கு வருவேன் – சந்திரபாபு நாயுடு உருக்கம்..!!
ஆந்திர மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி உள்ளன. தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் ஜனசேனா கட்சித் தலைவர்கள் பொதுக்கூட்டம் நடைபயணம், ரோடு ஷோ நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் எதிர்க்கட்சியாக உள்ள சந்திரபாபு நாயுடு வரும் தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக மாநிலம் முழுவதும் ரோடு ஷோ நடத்தி வருகிறார். இதேபோல், அவரது மகன் நாரா லோகேஷ் வரும் ஜனவரி மாதம் முதல் ஆந்திரா முழுவதும் 400 நாட்கள் நடை பயணம் செல்ல பயணம் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் கர்னூலில் சந்திரபாபு நாயுடு திறந்தவேனில் ரோடு ஷோ நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது: ஆந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சியில் அநியாயங்கள் பெருகிவிட்டன. மளிகை பொருட்கள், காய்கறிகள், பெட்ரோல் டீசல் விலை உயர்வு விண்ணைத் தொட்டுக் கொண்டுள்ளது. சாலைகள் குண்டும் குழியுமாக சீரமைக்கப்படாமல் உள்ளது. ரோடுகளை கூட சீரமைக்க முடியாத இவரால் எப்படி 3 தலைநகரங்களை அமைக்க முடியும். இவரது ஆட்சியில் ஏழைகள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். என்னுடைய 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் என்னை அவமதிக்கவோ அல்லது அவமதிக்க யாரும் முயற்சி செய்யவில்லை. ஆனால் என்னையும் எனது மனைவி புவனேஸ்வரியும் ஜெகன்மோகன் ரெட்டி அவமதித்து பேசினார்.
எனக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஒரே வயது. ஜெகன்மோகன் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் அவமதித்துவிட்டார். வரும் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்க அதிகாரம் கொடுத்தால் மட்டுமே சட்டசபைக்குள் வருவேன்.இல்லை என்றால் இதுவே எனது கடைசி தேர்தலாக இருக்கும். நான் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிலேயே ஆந்திராவை முதல் மாநிலமாக மாற்றிக் காட்டுவேன். தெலுங்கு தேசம் ஆட்சி அமைத்த பிறகு ஜெகன்மோகன் செய்த பல்வேறு குற்றங்களுக்காக சிறை செல்வது நிச்சயம். எனக்கு நேர்ந்த கொடுமைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் மீண்டும் தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வர வேண்டும் என தெரிவித்தார்.