புதிய தலைமுறையினருக்கு வழிவிட பதவி விலகுகிறார் பரூக் அப்துல்லா..!!
நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா (வயது 85), தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘இனி தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டேன். தலைவர் பதவிக்கான தேர்தல் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. புதிய தலைமுறையினர் பொறுப்புகளை ஏற்கும் நேரம் இது. கட்சியின் உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம். இது ஒரு ஜனநாயக நடைமுறை’ என்றார். தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் பரூக் அப்துல்லா, கட்சியின் புரவலராகப் பொறுப்பேற்பார் என்றும், தற்போது கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் அவரது மகன் உமர் அப்துல்லா, புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.