திருமலை-திருப்பதி தேவஸ்தான கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடு..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலின் துணைக் கோவில்களான திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி கோவிந்தராஜசாமி, கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், அப்பலாயகுண்டா பிரசன்னவெங்கடேஸ்வரர் கோவில், கார்வேட்டிநகரம் வேணுகோபாலசாமி கோவில், நாகலாபுரம் வேதநாராயணசாமி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் வரும் ஜனவரி மாதம் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.
அதற்கான ஏற்பாடுகளை செய்வது குறித்து திருமலை-திருமலை தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் இணை அதிகாரி வீரபிரம்மன் பேசியதாவது:-
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அந்தந்தக் கோவில்களில் பக்தர்கள் வழிபட அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஆகம பண்டிதர்கள் கூறி உள்ள நேரத்தை சரியாக பின்பற்ற வேண்டும். கோவில்களை மலர்களாலும், மின் விளக்குகளாலும் அழகாக அலங்கரிக்க வேண்டும். பக்தர்களின் கூட்டத்துக்கு ஏற்றவாறு மற்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கோவில்களில் தூய்மை மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர், தங்குமிடம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதற்காக கோவில் அதிகாரிகள் உள்ளூர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்து கொள்ளலாம். அந்தந்தக் கோவில்களில் பாரம்பரிய பூஜை நிகழ்ச்சிகளை நடத்தலாம். பக்தர்களின் வசதிக்காக உதவி மையங்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்காக உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
பக்தர்களுக்கு சேவை வழங்க மருத்துவ முகாம்களை அமைத்துக் கொள்ளலாம். சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து அங்குள்ள கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளலாம். பக்தர்களை கவரும் வகையில் ஆன்மிக மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை நடத்தலாம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.