;
Athirady Tamil News

யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களின் ஆவணப்படங்கள் திரையிடல்!! (PHOTOS)

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22.11.2022) பிற்பகல் ஒரு மணியளவில் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் திரையிடப்பட உள்ளன.

இந்த ஆவணப்பட விழாவில் சமூகத்தின் பல்வேறு விடயங்களைப் பற்றிப் பேசுகின்ற பதினான்கு ஆவணப்படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்த ஆவணப்பட விழாவில் ஆனையிறவு உப்பளத்தின் தற்போதைய நிலை சொல்லும் ‘கடல்விளை அமுதம்’, மலையகக் கிராமமொன்றின் விளையாட்டு மைதானத் தேவையைப் பற்றிப் பேசும் ‘மைதானம்’, நீர்வேலி வாழை உற்பத்தியாளர் கூட்டுறவுச்சங்கத்தின் செயற்பாடுகள் பற்றிப் பேசும் ‘வாழைக்குலைச் சங்கம்’, சூழல் மாசடைவதை ஏதோ ஒரு வகையில் குறைக்கும் வண்ணம் பழமையை வழமைக்கு கொண்டுவரும் சிறிய முயற்சி பற்றிப் பேசும் ‘மிதியுந்து’, சிற்பக்கலையில் அருகி வரும் உளிப்பயன்பாடு மற்றும் அதிகரித்து வரும் இயந்திரங்களின் பயன்பாடு பற்றிப் பேசும் ‘உளி தொடாக்கலை’,
வழக்கொழிந்து போயிருக்கும் சூத்திரக் கிணறு நீர்ப்பாசன முறை பற்றிப் பேசும் ‘அழிவடைந்து போன பழமை’, ஆழக்கடலின் ஆபத்து அறியாது அதில் நீராடச்சென்று மரணித்துப்போன மூன்று சகோதரர்களின் கதை சொல்லும் ‘செம்மலையின் கண்ணீர்’, மரபு ரீதியான கால்நடை வளர்ப்பு மூலமான தற்கால தன்னிறைவுப் பொருளாதாரம் நோக்கிய நகர்வு பற்றிப் பேசும் ‘வன்னியின் ஆவுடையூர்’, நீடித்த வனையுடனான பலவர்ண ‘பற்றிக்’ உள்ளூர் உற்பத்தி பற்றிப் பேசும் ‘வானவில்’, நந்திக்கடல் மீன்பிடியின் தற்போதைய நிலை பற்றிப் பேசும் ‘நந்திக்கடல் மீன்பிடி’,
மலையகப் பெண்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் வாழ்வியற் சிக்கல்களைச் சொல்லும் ‘அம்மா’, வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக இருந்து இன்று சிதைவடைந்திருக்கும் கீரிமலை வெளவால் புறாக்குகையின் கதைசொல்லும் ‘மறைந்திருக்கும் தொன்மம்’, மாற்றுத்திறனாளிக் கலைஞர் ஒருவரின் கலைத்துறைப் பயணம் பற்றிப் பேசும் ‘இருளொளி’, தமிழர்களின் பாரம்பரிய இயந்திரப் பொறிமுறை பற்றிப் பேசும் ‘தூய மரச்செக்கு எண்ணெய்’ ஆகிய ஆவணப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.